சிறகு விரிக்கும் ஓர் எழுத்தாணி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறுவர்களுக்காக வெளியிடும் “துளிர்,”  அறிவியல் மாத இதழில் ஜூன் 2018 பிரசுரமானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு.வே. கணேஷ்வர்

விசிறிக்கொண்டை ஒய்யாரி

சிறகு விரித்தால் சிங்காரி

பறக்கும் அழகென்ன

நடக்கும் பவிசென்ன

போயும் போயும் தின்பாளே

புழுவைத் தரையில் கொத்தியே

–ஆசைத்தம்பியின் கொண்டலாத்தி கவிதைத் தொகுப்பிலிருந்து.

இனங்கள்

கொண்டலாத்தி (Eurasian Hoopoe), ஆப்பிரிக்க கொண்டலாத்தி (African Hoopoe), மற்றும் மடகாஸ்கர் கொண்டலாத்தி (Madagascan Hoopoe).

ஆங்கிலப் பெயர்க்காரணம்

தன் வாழிட எல்லையைக் குறிக்கவும் இணையைக் கவரவும் “ஹூப்ஹூப்பூப்… ஹூப்ஹூப்பூப்…” எனக் குரலெழுப்பும். இந்த ஒலியை வைத்தே அதன் பெயர் ஆங்கிலத்தில் “ஹூப்போ” (Hoopoe) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மண்கொத்தியா அல்லது மரங்கொத்தியா?

பெரும்பாலானோர் கொண்டலாத்தியைப் பார்த்தவுடன் மரங்கொத்தி என்று எண்ணுகின்றனர். அதன் அலகு நீளமாக இருப்பது காரணமாக இருக்கலாம். பத்திரிக்கைகளிலும் பல நேரம் இப்படி தவறாக இடம் பெற்றுவிடுகிறது. ஆனால் இது மரங்கொத்தி அல்ல. வேண்டுமானால் மண்கொத்தி என்று அழைக்கலாம். ஏனெனில் மரங்கொத்தியைப் போல மரத்தைக் கொத்தாமல் தன் நீண்ட எழுத்தாணி போன்ற அலகின் மூலம் நிலத்தில் உள்ள மண்ணைக் கொத்திக் கிளரி இரை தேடி உண்ணும்.

பிற வழக்குப் பெயர்கள்

கொண்டலாத்தி, கொண்டை வளர்த்தி, எழுத்தாணிக் குருவி, விசிறிக்கொண்டைக் குருவி, புழுக்கொத்தி, கொண்டை உலர்த்தி, சாவல் குருவி, கொண்டஞ்சிலாடி.

பரவல் மற்றும் வாழிடம்

ஐரோப்பா, ஆசியா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மடகாஸ்கரிலும் பரவி உள்ளது. வெற்றுத் தரை உள்ள நிலங்களில் அல்லது சிறிது தாவரங்கள் வளர்ந்த நிலப்பரப்பில் இவை உணவு தேடும். செங்குத்தான, பொந்து உள்ள இடங்களில் முட்டை இட விரும்பும். இந்த இரு தேவைகளையும் பல்வேறு வாழிடங்கள் நிறைவு செய்யும் காரணத்தினால் கொண்டலாத்தி பெரும்பாலான பகுதிகளில் வசிக்கிறது. கொண்டலாத்தி இஸ்ரேலின் தேசியப் பறவையாகும்.

Hoopoe_with_insect
அலகில் பூச்சியுடன் கொண்டலாத்தி. படம்: விக்கிமீடியா காமன்ஸ்

பண்புகள்

பறக்கத் துவங்கும் முன்பாகவும் உணர்ச்சியை வெளிப்படுத்தவும் தலையில் உள்ள கருநுனிக் கொண்டையை விசிறி போல விரித்துச் சுருக்கும். கொண்டலாத்திகள் தரையில் அமர்ந்து சிறகுகளை விரித்து தலையை சற்று தூக்கி படுத்துக்கொள்வது போல செய்யும். நீண்ட காலமாக இதை ஒரு தற்காப்பு முறை என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் வெயில் காயத்தான் அப்படி செய்கிறது என்று பின்னாளில் புலப்பட்டது. இவற்றுக்கு மண் குளியல் செய்யவும் பிடிக்கும்.

உணவு

வெட்டுக்கிளிகள், வண்டுகள் என பெரும்பாலும் பூச்சிகளே இவற்றின் பிரதான உணவு. சிறு ஊர்வன, தவளைகள், சிறு விதைகள், பழங்களையும் கூட உண்ணும். தனியாகவே இரை தேடும் பழக்கமுடையவை.

இனப்பெருக்கம்

சுவர் மற்றும் மரங்களில் உள்ள பொந்தில் கூடமைக்கும். பெண் பறவை மட்டுமே முட்டைகளை அடை காக்கும். தென்துருவத்தில் வாழும் பறவைகளை விட வடதுருவத்தில் வாழ்பவை அதிக எண்ணிக்கையில் முட்டைகள் இடும். வால் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சுரப்பியிலிருந்து துர்நாற்றம் மிக்க திரவத்தை வெளியேற்றுவதன் மூலம் இரைகொல்லிகளிடமிருந்து கூட்டை தற்காத்துக்கொள்கின்றன. அந்த திரவத்தை இறைக்கைகள் முழுவதும் பூசிக்கொள்ளும். அழுகும் இறைச்சி போன்ற நாற்றமுடைய இத்திரவம் குஞ்சுகள் கூட்டை விட்டு வெளியேறுமுன் சுரப்பது நின்றுவிடும். முட்டைகளை 15 முதல் 18 நாட்கள் வரை அடைகாக்கும். இக்காலத்தில் பெண்ணுக்கு ஆண் பறவை உணவளிக்கும். முதல் முட்டை இட்டவுடன் அடைகாக்கத் துவங்குவதால் குஞ்சுகள் வெவ்வேறு சமயத்தில் பொரிக்கும்.

மனிதர்களும் கொண்டலாத்திகளும்

கொண்டலாத்திகள் பரவி உள்ள இடங்களில் இவற்றுக்கு கலாச்சார முக்கியத்துவம் உள்ளது. பண்டைய எகிப்தில் இவை புனிதமாகக் கருதப்பட்டு கோவில் சுவர்களில் வரையப்பட்டன. செங்கடலைக் கடந்த பின்பு மோசஸ் மற்றும் இஸ்ரேலின் குழந்தைகள் நசுக்கப்படுவதிலிருந்து கொண்டலாத்தி அவர்களைக் காப்பாற்றியதாக இசுலாமிய இலக்கியம் கூறுகிறது. பெர்சியப் பாடல் ஒன்றில் பறவைகளுக்குத் தலைவனாக ஒரு கொண்டலாத்தி இடம்பெறுகிறது.

பாதுகாப்பு

விவசாயத்திற்கு சேதம் விளைவிக்கக்கூடிய பல பூச்சியினங்களை கொண்டலாத்திகள் உண்பதால் மனிதர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. இக்காரணம் கருதியே பல நாடுகள் சட்டப்படி இவற்றை பாதுகாக்கின்றன.

 

கொண்டலாத்தி உன்வரவால் கொள்ளை இன்பம்

கொண்டையாட்டி நீநடந்தால் கூடுங் கொஞ்சம்

வெண்ணிறமும் கருநிறமும் இறகில் மின்னும்

விரிவானின் வில்போலே வியப்பைக் கூட்டும்

அண்டைவயல் வெளிகளிலே அன்பே உன்னை

அன்றொருநாள் கண்டதிலே ஆவல் கொண்டேன்

கண்மணியே எம்கானைக் காண்பாய் என்றேன்

கானிலுனைக் கண்டதுமே களித்தே விட்டேன்

உண்டிருந்தாய் பூச்சிகளை ஒருநாள் இங்கே

ஒளிந்துன்னைப் பார்த்துவிட்டேன் உயிர்ப்பூம் புள்ளே

மண்வண்ண உடம்பாலே மறையப் பார்த்தாய்

மாட்டிவிட்டாய் என்கண்ணில் மணிப்பூம் புள்ளே

கண்நிறைந்தாய் அழைப்பேற்றுக் கானுள் வந்தாய்

களிப்பீந்தாய் காணதற்குக் காசா கேட்டாய்

மண்டுகின்ற ஆசைகொன்றாய் மகிழ்வைக் கண்டாய்

மாந்தருன்போல் ஆசையின்றி மகிழ்வ தென்றோ?

–செல்வமணி அரங்கநாதனின் “மாட்டுவண்டியும் மகிழுந்தும்” என்கிற கவிதைத் தொகுப்பிலிருந்து.

ஒரு சுவாரசிய நிகழ்வு

அண்மையில் மாடியில் துணி காயவைத்துக் கொண்டிருந்த போது வழக்கம் போல வீட்டுக்கு வரும் கொண்டலாத்தி ஒன்று வந்தது. சிறிது நேரம் அதை ரசித்துக்கொண்டிருக்க அப்பறவை எதிர்வீட்டு வெண்டிலேட்டரின் சிலந்தி வலையை அலகால் நீக்கிவிட்டு அதில் சிக்கியிருந்தப் பூச்சிகளை உண்டது. கொண்டலாத்தி நீண்ட நேரம் அங்கு அமர்ந்திருந்ததைக் கண்ட கருந்தலை மைனா ஜோடிக்கு அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் தாங்க முடியவில்லை. முதலில் ஒரு மைனா சென்று அமைதியாக கவனித்தது. வெண்டிலேட்டர் சிறியது என்பதால் கொண்டலாத்திக்கு மட்டுமே இடம் இருந்தது. தனியாக கீழே இறங்கிப் பார்க்கும் அளவிற்கு அந்த கருந்தலை மைனாவுக்கு தைரியம் வரவில்லை.

Brahminy Starling
கருந்தலை மைனா. படம்: விக்கிமீடியா காமன்ஸ்

உடனே தன் இணையை அழைத்தது. இணை வந்த தைரியத்தில் கொண்டலாத்தி அமர்ந்திருந்த இடத்தில் இதுவும் அமர முயற்சித்தது. ஆனால் கொண்டலாத்தி கோபமாக விரட்டி விட்டது. பின்னர் கொண்டலாத்தி சென்றவுடன் இரண்டும் அமர்ந்து மீதமிருந்த சில பூச்சிகளை உண்டுவிட்டு பறந்தன. காகங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். ஆனால் கருந்தலை மைனாக்களுக்கு ஒரு பறவை செய்வதைப் பார்த்து தானும் அவ்வாறு செய்ய இவ்வளவு ஆர்வம் இருக்குமா என்பதை அன்று வரை நான் அறிந்திருக்கவில்லை. கொண்டலாத்தி வரமால் போயிருந்தால் கருந்தலை மைனாக்களின் இந்தப் பண்பு எனக்குத் தெரியாமலேயே போயிருக்கலாம்.