தமிழ்நாட்டின் மாநிலப் பறவை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறுவர்களுக்காக வெளியிடும் “துளிர்”  அறிவியல் மாத இதழில் ஜனவரி 2018 பிரசுரமானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு.வே. கணேஷ்வர்.

இந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களுக்கு மட்டுமே மாநிலப் பறவையாக புறா இனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை Emerald Dove மரகதப் புறா (தமிழ்நாடு), Yellow-footed Green Pigeon மஞ்சள் கால் பச்சைப் புறா (மகாராஷ்டிரா), Green Imperial Pigeon காட்டு பச்சைப் புறா (திரிபுரா) மற்றும் Andaman Wood Pigeon அந்தமான் காட்டுப் புறா (அந்தமான்).

பரவல் மற்றும் வாழிடம்

மரகதப் புறா இந்திய துணைக்கண்டம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள் வரை பரவி உள்ளது. மழைக்காடுகள், அதை ஒத்திருக்கும் ஈரமான காடுகள், தோட்டங்கள், தோட்டங்களில் வாழும்.

உடலமைப்பு

வளர்ந்த மரகதப் புறா 27 செண்டிமீட்டார் நீளமும் (அலகின் நுனி முதல் வால் நுனி வரை) 90 முதல் 174 கிராம் வரை எடை இருக்கும். உடல் பழுப்பு நிறம். ஆண் பறவைகளின் தலை வெளிர் சாம்பல் நிறத்திலும் பெண்ணின் தலை பழுப்பாகவும் இருக்கும். இரண்டிற்குமே வெள்ளைப் புருவம் உண்டு. குட்டையான அலகு ஆரஞ்சு நிறத்திலும் இறக்கைகளும் தோள்பட்டையும் மிளிரும் மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். பார்க்கும் போதே மனதைப் பறிக்கும் அழகு அது! பறக்கும் போது வாலும் இறக்கையின் வெளிப்புறமும் கருப்பாகத் தெரியும்.

EMDO மெல்வின்
தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப் புறா. படம்: மெல்வின் ஜெய்சன்

பண்புகள்

மரங்கள் அடர்ந்த பகுதிகளிலும் கூட இவை எங்கும் இடித்துக் கொள்ளாமல் வேகமாகவும் தாழ்வாகவும் பறக்கும். மிகுந்த கூச்ச சுபாவம் உள்ள இவற்றைக் காண்பது சற்று சிரமம் தான். தனியாகவோ, ஜோடியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ வாழும். காட்டின் தரையில் விழுந்துள்ள பலவிதமான பழங்கள், செடி விதைகள் சில நேரங்களில் கரையான்களையும் உண்ணும். இதனால் விதைப் பரவலுக்கு உதவுகின்றன. நாம் காட்டுப் பாதை வழியாக பயணிக்கும் போது ரோட்டில் இவை இரை தேடுவதைக் காண இயலும்.

இனப்பெருக்கம்

இனப்பெருக்கம் கோடைக்காலத்திற்கு முன்னதாக மற்றும் வசந்தகாலத்திலும் நடைபெறும். இணை சேரும் முன்பாக ஆண் பறவை தலையை முன்னும் பின்னும் அசைத்து நடனமாடி பெண்ணைக் கவரும். பொதுவாக மரத்தில் ஐந்து மீட்டர் அளவில் தான் குச்சிகளை வைத்து கூடமைக்கும். இரண்டே இரண்டு கிரீம் நிற முட்டைகளை இடும். பெண் பறவை மட்டுமே முட்டைகளை அடைகாக்கும். 13 முதல் 15 நாட்களுக்குப் பிறகு குஞ்சுகள் பொரிக்கும்.

பாதுகாப்பு

இந்திய வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தால் இவை பாதுகாக்கப்படுகின்றன. இதனால் இவற்றின் எண்ணிக்கை நல்ல நிலையில் உள்ளது. தற்போதைக்கு இவை அழிவை நோக்கி செல்வதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. ஆனால் மரகதப் புறாக்களின் கறி சில நோய்களை குணமாக்கும் என்ற மூடநம்பிக்கையால் சில இடங்களில் வேட்டையாடப்படுகின்றன. இப்புறாக்களை துன்புறுத்துவதோ வேட்டையாடுவதோ கூண்டுகளில் அடைத்து வைப்பதோ கடத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.