ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு: ஒரு தலைமை ஆசிரியரின் பார்வை

எழுத்து: செந்தில்குமார், தலைமை ஆசிரியர் (மற்றும் பறவை ஆர்வலர்), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணம்புதூர், சேலம்.

இதோ நெருங்கிவிட்டது ஆண்டுதோறும் உலக அளவில் நடைபெறும் மாபெரும் பறவைகள் கணக்கெடுப்பான ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு 2020 Great Backyard Bird Count. பிப்ரவரி 14 முதல் 17 வரை நான்கு நாட்களும் பறவை ஆர்வலர்களுக்குக் கொண்டாட்டம் தான். தனியாகவோ, குழுவாகவோ இந்தியாவில் உள்ள பல்வேறு வாழிடங்களில் பறவை ஆர்வலர்களின் கால்தடம் பதிந்துவிடும். இருநோக்கி மற்றும் ஒளிப்படக்கருவிகள் மூலம் பறவைகளைச் சுட்டி வீழ்த்தும் அழகே தனி. இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் புதிய பறவைகளைப் பதிவு செய்வது முதல் அதிக பறவை இனங்கள் பார்ப்பது, அதிக பறவைப் பட்டியல்கள் சமர்ப்பிப்பது வரை மாபெரும் பங்களிப்புகளைத் தரக் காத்திருக்கும் அனைத்துப் பறவை ஆர்வலர்களுக்கும் முதலில் நன்றி சொல்லியே தீரவேண்டும்.

இக்கணக்கெடுப்பை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களும் வளாகப் பறவைகள் கணக்கெடுப்பில் Campus Bird Count பங்கு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு: https://birdcount.in/event/cbc2020/

gbbc-2019-stats-world
2019 கணக்கெடுப்பில் உலகளாவிய பங்களிப்பு

2018 & 2019ன் கணக்கெடுப்புகள்

2019 GBBCல் அதிக பறவைப் பட்டியல்கள் சமர்ப்பித்த நாடுகளில் மூன்றாவது இடத்திலிருந்து முன்னேறி முதல்முறையாக உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது இந்தியா. இப்படி உலக அளவில் நம் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது மிகவும் மகிழ்சிகரமான ஒன்று. இதற்கு பறவை ஆர்வலர்களின் அயராத உழைப்பும் ஒருங்கிணைப்பும் காரணம் என்று தான் கூற வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பறவைப் பட்டியல் (checklist) என்பது குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது இருக்க வேண்டும்.

கடந்த இரு ஆண்டுகளில் GBBCல் உலக அளவில் முதல் மூன்று இடங்களைப் (பறவைப் பட்டியல்கள் அடிப்படையில்) பிடித்த நாடுகள்

Rank

GBBC 2018 Checklists GBBC 2019 Checklists

1

அமெரிக்கா 1,10,151 அமெரிக்கா 1,21,459
2 கனடா 14,146 இந்தியா

22,273

3 இந்தியா 13,576 கனடா

14,667

கடந்த இரு ஆண்டுகளில் GBBCல் உலக அளவில் முதல் மூன்று/நான்கு இடங்களைப் (அதிக பறவை இனங்களைப் பதிவு செய்ததன் அடிப்படையில்) பிடித்த நாடுகள்

Rank

GBBC 2018 No. of Species GBBC 2019 No. of Species
1 கொலம்பியா 1009 கொலம்பியா

1115

2

கனடா 919 ஈக்வடார் 966
3 பிரேசில் 860 இந்தியா

852

4

இந்தியா 838 பிரேசில்

848

இந்தப் புள்ளி விவரங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தைக் காட்டினாலும் தேவைப்படும் வெற்றியை இன்னும் எட்டவில்லை என்று தான் நான் சொல்வேன். 120 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நம் திருநாட்டில் 2019 பிப்ரவரியில் நடைபெற்ற ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் பங்குபெற்ற பறவை ஆர்வலர்களின் எண்ணிக்கை வெறும் 1786 (based on eBird accounts) பேர் தான் என்பது வேதனை அளிக்கிறது. பறவைகளைப் பற்றிய விழிப்புணர்வு இன்மையையே இப்புள்ளி விவரங்கள் நமக்குக் காட்டுகின்றன.

அதன் விளைவு எத்தனை பறவை இனங்களை இழந்திருக்கிறோம். அழிவின் விளிம்பில் உள்ள பறவை பறவைகள் எத்தனை? அழிவை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் பறவைகள் எத்தனை? இன்னும் கானமயிலும் பாறுக்கழுகும் இந்தியா முழுவதும் நூறுகளின் எண்ணிக்கையிலேயே வாழ்க்கைப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன.

வடஇந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்குமான வேறுபாடு

2019ல் இந்திய அளவில் 22,273 பறவைப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 8 ஆயிரம் பட்டியல்கள் அதிகம் என்றாலும் இந்தியா முழுக்கப் பரவலாக இல்லாமல் தென்னிந்தியாவிற்கும் வடஇந்தியாவிற்குமான பெருத்த வேறுபாட்டைக் காட்டுகிறது. இந்தியாவின் மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றான உத்திரப்பிரதேசத்தில் வெறும் 80 பறவைப் பட்டியல்களே பதிவிடப்பட்டது வேதனை அளிக்கிறது.

மாநிலங்கள்

GBBC 2019 பறவைப் பட்டியல்கள்

தமிழ்நாடு

10,111

கேரளா

3,674
கர்நாடகா

2,734

பிற மாநிலங்கள் அனைத்தும்

5,754

மொத்தம்

22,273

இன்னும் இப்புள்ளி விவரங்களை ஆழ்ந்து நோக்கினால் இந்தியா முழுமைக்கும் 60 சதவீத மாவட்டங்களில் பறவைகள் பற்றியப் பதிவுகள் இல்லை. வெறும் 40 சதவீத பதிவுகள் தான் உலக அளவில் நம்மை இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. காரணம் ஒன்று தான். ஆண்டுதோறும் உலக அளவில் இப்படியொரு கணக்கெடுப்பு நடைபெறுகிறது என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இந்நிகழ்வினைக் கொண்டு செல்ல போதுமான வாய்ப்புகளும் வசதிகளும் இல்லை என்று பொருள். அரசு மட்டும் நினைத்தால் இதில் ஒரு பெரும் மாற்றத்தையும், விழிப்புணர்வையும் ஒரேயொரு அறிவிப்பின் மூலம் ஏற்படுத்த முடியும்.

2019 GBBC: தமிழ்நாடு பதிவு செய்த 10,111 பறவைப் பட்டியல்களில் 8,420 பட்டியல்கள் சேலம் மாவட்டப் பறவை ஆர்வலர்காளால் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கணக்கெடுப்பினால் என்ன பயன்? ஏன் செய்ய வேண்டும்?

இதனால் நமக்கு என்ன பயன் என்ற வினா தோன்றினால் விடை எளிதானது. சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை சுட்டிக்காட்டும் காரணிகளில் பறவைகளும் ஒன்று. பறவைகள் இல்லை என்றால் மனித இனமே இல்லாமல் போய்விடும் என்பது தான் நிதர்சனம். பறவைகளின் தன்னலம் கருதாப் பயன்களையும், தொடர்ந்து நவீனத்தால் பறவைகள்படும் துயரங்களையும் கடந்த, இந்த தலைமுறைகளும் அறியாமலே உள்ளனர். அதனை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதற்கு ஒரு வாய்ப்பாக இந்தக் கணக்கெடுப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் நாம் தரும் ஒவ்வொரு தகவல்களும் பறவைகளைக் காப்பாற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

வீட்டிற்கு ஒரு இயற்கை ஆர்வலர் தேவை!

மதிப்புமிக்க இயற்கையைப் பற்றி அறிந்து கொள்ளாமல் தேர்வு மதிப்பெண்களின் பின்னே ஒரு தலைமுறை ஓடிக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் கல்வி என்று பள்ளியில் ஒரு தேர்வு நடைபெறும். ஆனால் அதில் பெறும் மதிப்பெண்களோ மதிப்பெண் பட்டியலில் இடம் பெறாது. பறவைகள் தான் சுற்றுச்சூழலின் தூதுவர்கள். பறவைகளைப் பற்றியோ இயற்கையைப் பற்றியோ புரிதல் ஏதுமின்றி தலைமுறைகள் உருவாவது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். சீரழிந்து வரும் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வீட்டுக்கு ஒருவர் பறவை/இயற்கை ஆர்வலராக மாற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இது போன்ற கணக்கெடுப்பில் பங்குகொள்ள பறவை ஆர்வலராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இருந்தாலே போதுமானது.

விளையாட்டாகச் செய்யலாமே…

உங்கள் பகுதியிலும் பறவைகளைக் கணக்கெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டதா? விளையாட்டாக ஒரு முறை பறவைகளைக் கணக்கெடுக்க வெளியே வாருங்கள். பறவைகள் உங்களை எப்படி ஈர்க்கிறது என்பது புரியும். நானும், என் குடும்பமும், பள்ளி மாணவர்களும் பிப்ரவரி 14 தொடங்கவிருக்கும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் கலந்துகொள்ளத் தயாராகிவிட்டோம். நீங்களும் தயாரா?

இந்த நான்கு நாட்களில் (14-17 பிப்ரவரி 2020) என்ன செய்ய வேண்டும்? நாம் குடியிருக்கும் பகுதியைச் சுற்றியுள்ள பறவைகளைப் பார்த்து, அடையாளம் கண்டு, கணக்கிட வேண்டும். இதை குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் செய்தாலே போதுமானது. நாம் எழுதி வைத்துள்ள பறவைப் பட்டியலை என்ன செய்ய வேண்டும், இதில் பள்ளிகள் பங்கு பெறலாமா, எப்படிச் செய்ய வேண்டும் போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

மேலும் உங்கள் பகுதியில் உள்ள பறவை ஆர்வலர்களையும் தொடர்பு கொள்ளலாம். சேலத்தில் ஊர்புறப் பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு குறித்த விரிவானத் தகவல்களுக்கும், பறவைகள் சார்ந்த குறுங்கையேடுகள், காட்சிப்படங்கள் போன்றவற்றைப் பெற சேலம் பறவையியல் கழகத்தை தொடர்பு கொள்ளவும்: 7598457496 or 9361313312.  GBBC poster SOF