தாரமங்கலத்தின் தாமரைக்கோழிக்குப் பேராபத்து

எழுத்து: அ. வடிவுக்கரசி, ஆசிரியை (& பறவை ஆர்வலர்), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணம்புதூர், சேலம்.

பள்ளி முடிந்து மாலை வீட்டிற்குத் திரும்பும் போது நானும் என் கணவரும் வழியில் தாரமங்கலத்தில் உள்ள பவளத்தானூர் ஏரியில் பறவைகளை இரசித்துவிட்டுச் செல்வது வழக்கம். அன்று மாலையும் அது போலவே இருநோக்கி (பைனாகுலர்) வழியாக பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஒப்பனைத் தோற்றம்

அங்கு சில மாதங்களாகவே இரண்டு தாமரைக்கோழிகளைப் (PHEASANT-TAILED JAÇANA) தினசரி பார்ப்போம். (ஆங்கிலத்தில் ஜக்கானா அல்ல. ஜசானா எனப் படிக்கவும்) சாதாரண நாட்களில் நாம் பெரிதும் ஒப்பனை செய்துகொள்ள மாட்டோம். ஆனால் திருமணம் போன்ற விழாக்காலங்களில் அனைவரும் அழகாக ஒப்பனை செய்து கொள்வது இயல்பானது. அது போலவே தான் தாமரைக்கோழியும் இனப்பெருக்கக் காலம் அல்லாத நேரத்தில் பெரிதும் கவர்ச்சி இல்லாத ஒரு தோற்றமும் இனப்பெருக்கக் காலத்தில் மிக அழகியத் தோற்றமும் கொண்டிருக்கும். நீர்த்தாவரங்களின் இலைகளின் மீது நடப்பதற்கு ஏற்றவாறு உறுதியான கால்களும் மிக நீளமான விரல்களையும் கொண்டிருக்கும். இப்படி ஒரு அழகானப் பறவையை நேரில் தினசரி பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்? ஒரு நாள் அதைக் காண முடியவில்லை என்றாலும் அது எங்கு சென்றிருக்கும், மீண்டும் நாளை வருமா, நம் கண்ணில் படுமா என்றெல்லாம் மனம் எண்ணத் துவங்கும்.

ptja by charles j sharp
இனப்பெருக்கக் காலத்தில் இல்லாத போதுள்ள தாமரைக்கோழியின் எளிய தோற்றம். படம்: சார்லஸ் ஜெ ஷார்ப்/விக்கிமீடியா
ptja by anonymus ebirder and sahana m
இனப்பெருக்கக் காலத்தில் அழகிய தோற்றத்தில் தாமரைக்கோழி. படம்: Sahana M/Macaulay Library/eBird

புதியதொரு குடும்பம்

ஒரு நாள் என் இருநோக்கி வழியே தாமரைக்கோழிகளை இரசித்துக் கொண்டிருந்தேன். அன்று தான் என் பறவை நோக்குதலில் நான் மிகவும் மகிழ்ந்த, நெகிழ்ந்த தருணமாக அமைந்தது. அப்போது பெரிய தாமரைக்கோழிகளுக்கு அருகில் ஏதோ சிறுசிறு அசைவு தெரிந்தது. அது என்னவாக இருக்கும் என்ற தேடலில் என் கண்கள் விரிந்தது. என்ன ஒரு ஆச்சரியம்! மகிழ்ச்சியில் மனம் மகிழ்ந்தது. என்னையும் அறியாமல் சத்தமாக தாமரைக்கோழி தன் குஞ்சுகளுடன் உள்ளது பாருங்கள் என்றேன். என் கணவரும் முதலில் நம்ப முடியாமல் உற்றுநோக்கிவிட்டு ஆமாம் அது தாமரைக்கோழியின் குஞ்சுகள் தான் என்றார்.

பொறுப்பான பாதுகாப்பு

என்ன ஒரு அழகு! பார்க்கப் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. மொத்தம் நான்கு குஞ்சுகள் இருந்தன. அவை தாய்ப்பறவையின் காலருகிலேயே இரையெடுத்துக் கொண்டிருந்தன. இரு பெரிய பறவைகளில் ஒன்று மட்டுமே குஞ்சுகளுடன் இருந்தது. மற்றொன்று சற்று தூரத்தில் இருந்தது. அதைக் கண்டவுடன் குஞ்சுகளுடன் இருப்பது தாய் என்றும் தொலைவில் இருந்து காவல் காப்பது தந்தை என்றும் நாங்களே நினைத்து பேசிக்கொண்டோம். குஞ்சுகள் இருக்கும் எல்லைக்குள் மற்ற நீர்ப்பறவைகள் வந்தால் அவற்றை இரு பறவைகளும் உடனே சென்று விரட்டிவிடும். அன்றிலிருந்து தினமும் காலையும் மாலையும் அவற்றைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை.

குடும்பத்தைக் காணவில்லை 

ஒரு நாள் இரவு மழை பெய்ய ஆரம்பித்தது. எனக்கு உடனேயே தாமரைக்கோழி குடும்பத்தின் நினைவு வந்துவிட்டது. மழையில் அந்த குஞ்சுகள் நனைந்து விடுமோ? அவற்றுக்கு காய்ச்சல் வந்து விடுமோ? அவற்றைத் தாய்ப்பறவை எப்படி மழையிலிருந்து காப்பாற்றும் என்றவாறு கவலையில் நான் புலம்பிக் கொண்டிருந்தேன். இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை. விடிந்தவுடன் என் கணவரிடம் சீக்கரம் சென்று அவற்றைப் பார்த்து வாருங்கள் என்று அவசரப்படுத்தினேன். நானும் அன்று என் சமையல் வேலைகளை விரைவாக முடித்துவிட்டு இருவரும் வேகமாகக் கிளம்பி பவளத்தானூர் ஏரியை அடைந்தோம். என் கண்கள் ஆர்வமாக அவற்றைத் தேடியது. ஆனால் காணமுடியவில்லை. வெகுநேரம் தேடியும் இல்லவே இல்லை. இரவு பெய்த மழையில் அவை என்ன ஆனதோ? எங்கு போனதோ? என்ற கவலை மேலோங்கியது. அந்தக் கவலையுடனேயே பள்ளிக்குச் சென்றுவிட்டேன்.

வேண்டினேன் கிடைத்தது 

என் மனம் மட்டும் என்னை அறியாது அவற்றின் நலனுக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டே இருந்தது. மீண்டும் பள்ளி முடிந்து மாலை பவளத்தானூர் ஏரிக்கு வந்து என் உள்ளம் கவர் தாமரைக்கோழி குடும்பத்தை மீண்டும் தேடினேன். சற்று தொலைவில் அது போலவே ஒரு பறவை இருப்பதை உணர்ந்தேன். எனக்கு ஆர்வம் மிகுந்தது. இருநோக்கி இருந்தாலும் அவற்றைத் தொந்தரவு செய்யாமல் முடிந்த அளவு அருகில் சென்று பார்த்தேன். அப்பாடா! என் உள்ளங்கவர் குடும்பம் பாதுகாப்பாக இருந்தது. மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அப்போது தான் நெஞ்சம் நிம்மதி அடைந்தது. இவ்வாறே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவற்றை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தோம்.

ptja 11
தாரமங்கலத்தின் தாமரைக்கோழி குடும்பம். படம்: செ. சுப்ரமணிய சிவா

அப்பாவிகளின் படுகொலை!  

திடீரென ஒருநாள் மாலை அவற்றுக்கு மேலும் ஒரு பேராபத்து வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அன்று மாலை நான் பள்ளியிலிருந்து வரும்போது ஏரிக்குள் ஐந்தாறு நபர்கள் அங்கிருந்தப் பறவைகளை எல்லாம் வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் தாமரைக்கோழி மட்டுமல்ல வெண்மார்பு கானாங்கோழி, தாழைக்கோழி என பல பறவை இனங்கள் தம் சந்ததியைப் பெருக்கி இருந்தன. அன்று அனைத்துப் பறவைகளும் தப்பிக்க வழி தெரியாது அலறிக் கொண்டிருந்தன. அந்நபர்களை நாங்கள் அழைத்தோம். எங்களிடம் இருநோக்கியும் கேமராவும் இருப்பதைக் கண்டவுடன் அவர்கள் சிதறி ஓடினார்கள். ஒருவரை மட்டும் விடாது அழைத்து இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டோம். அதற்கு நண்டு, மீன் ஆகியவற்றை பிடிக்கிறோம் என்று கூறினார். ஆனால் நீங்கள் பறவைகளை பிடித்து முள் புதருக்குள் ஒளித்து வைத்ததைக் கண்டேன் என்று சொன்னவுடன், இல்லை இனி அவ்வாறு செய்யமாட்டோம் எனக்கூறிவிட்டு ஓடிவிட்டார். எனக்கோ மனம் ஆறவில்லை.

அங்கு பாலம் கட்டும் பணியில் இருந்த ஒருவர் இவற்றை எல்லாம் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எங்களிடம் வந்து அவர்கள் பொய் சொல்வதாகவும் பறவைகளைப் பிடித்து வேட்டிக்குள் ஒளித்து வைத்து எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்றார். அவரிடம் இனி இவர்கள் போல் யாராவது இங்கு வந்து பறவைகளை வேட்டையாடி கொலை செய்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். இருந்தாலும் அதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. வீட்டிற்கும் வந்ததும் என்னால் நிம்மதியாக இருக்கவும் முடியவில்லை. ஐந்து நிமிடத்தில் என் கணவரிடம் மீண்டும் சென்று அங்கு பார்ப்போம் என்று கூறினேன். அந்தக் கொலைகாரர்கள் மீண்டும் வந்தார்களா? என் குட்டி தாமரைக்கோழிகள் உயிருடன் உள்ளதா? என்று தெரிந்து கொள்ள கிளம்பினோம். ஆனால் அங்கு ஒருவரும் இல்லை.

அங்கு மேம்பால வேலையில் இருந்தவர் மட்டும் எங்களிடம் வந்து நீங்கள் சென்றவுடன் அவர்கள் மீண்டும் வந்து புதருக்குள் ஒளித்து வைத்திருந்த பறவைக் குஞ்சுகளை எடுத்துச் சென்றனர் என்றார். எனக்கு வேதனையாக இருந்தது. மீண்டும் என் கண்கள் தாமரைக்கோழிகளைத் தேடியது. ஆனால் அங்கு ஒரு பறவையும் இல்லை. கண்கள் குளமாயின. அன்று இரவு தூக்கமே வரவில்லை. மறுநாள் காலை பறவைகளின் நிலை குறித்த கவலையோடு மீண்டும் பவளத்தானூர் ஏரிக்குச் சென்றோம். ஒரு சில பறவைகளே இருந்தன. மீண்டும் எனக்கு ஏமாற்றம். தாமரைக்கோழிகள் குறித்த கவலை மேலிட்டது. ஒரு வேளை வேட்டையாடப்பட்டிருக்குமோ? என மனம் அச்சப்பட்டது. இந்த மனிதர்கள் மீது எனக்கு கோபமும், வெறுப்பும் ஏற்பட்டது. இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என சிந்தித்தது. அன்று மாலை நான் பள்ளியிலிருந்து வரும்போது ஏரி நிசப்தமாக இருந்தது.

wbwat by srikanth mannepuri and conservation india
வேட்டையாடப்பட்ட வெண்மார்பு கானாங்கோழிகள். Representational image. படம்: Srikanth Mannepuri/Conservation India

தொடரும் கொலைகள் 

மீண்டும் ஒரு சிறிய தேடல் ஏமாற்றத்துடன் வீட்டை அடைந்தேன். சிறிது நேரத்திற்குள் என் மகன் சுப்ரமணிய சிவா பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தான். அவன் வீட்டிற்குள் நுழைந்தவுடன், “அம்மா வாங்க உடனே ஏரிக்கு போகலாம்; மீண்டும் ஆட்கள் இறங்கி பறவைகளை வேட்டையாடுகிறார்கள். நான் பேருந்திலிருந்து பார்த்தேன்” என்றான். உடனே நாங்கள் கிளம்பிப் போனோம் அவன் சொன்னது சரிதான். அவர்களை அழைத்து முதலில் இது தவறு இவையெல்லாம் அரியவகை பயனுள்ள பறவைகள் இவற்றை வேட்டையாடுவதால் உங்களுக்கு என்ன பெரிதாகக் கிடைத்துவிடப்போகிறது என்று அறிவுரைக் கூறினேன்.

நாங்கள் கேமிரா வைத்திருப்பதைப் பார்த்து பயந்து போனார்கள். நாங்கள் உங்களைப் புகைப்படம் எடுத்துவிட்டோம். இந்த ஏரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளது என்று கூறவே அவர்கள் பயந்து இனி இவ்வாறு செய்யமாட்டோம் என்று கூறி கிளம்பிவிட்டனர். இருப்பினும் என் தாமரைக்கோழி குடும்பத்தை மட்டும் பார்க்கமுடியவில்லை. இரண்டு நாட்கள் ஏமாற்றத்துடனே போனது.

வாழக் கிடைத்த ஒரு வாய்ப்பு 

பின்னர் அதோ வந்துவிட்டது என் தாமரைக்கோழிகள் என்று எனக்குள் ஒரு மின்னல் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆம்! அவற்றின் தரிசனம் மீண்டும் கிடைத்தது. மீண்டும் அதன் குஞ்சுகளை எண்ணிப்பார்த்தேன் ஆஹா! என்ன சாதுர்யம்! எவ்வளவு திறமையாக அதன் குஞ்சுகளை அது காப்பாற்றியுள்ளது என் நினைத்து மகிழ்ந்தேன். நிம்மதிப் பெருமூச்சு வந்தது. இன்றுவரை அது தன் குஞ்சுகளை மிகத் திறமையாக காத்து வளர்த்து வருகிறது. குஞ்சுகள் இப்போது பறக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டன. சில மனிதர்களின் கொடூர எண்ணங்கள் மற்றும் செயல்களினால் ஏரியில் பல பறவைகள் வேட்டையாடப்பட்டு விட்டன. இதைத் தடுக்க தொடர்ந்து ஏரியை கண்காணிக்க வேண்டும். எப்படியோ இந்த முறை தாமரைக்கோழி குடும்பம் தப்பித்து வாழ்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பறவைகளின் வாழ்வில்தான் எவ்வளவு சவால்கள். பறவையைப் போல் பிறந்தால் மகிழ்ச்சி என நினைத்திருந்த எனக்கு இந்த அனுபவம் பறவைகளைப் பாவமாகவும் சமூகப் போராளிகளாகவும் காட்டியது. காலை விடிந்தவுடன் உணவு, பாதுகாப்பு, உறைவிடம் என அனைத்துச் சவால்களையும் ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கும் போராளிகள்தான் பறவைகள். அவற்றுக்கு நாம் ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருந்து கடமையாற்ற வேண்டும் என்ற விதை என்னுள் ஆழப் பதிந்தது.