வெள்ளைப் பூனையும் கறுப்புக் கரிச்சானும்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறுவர்களுக்காக வெளியிடும் “துளிர்,”  அறிவியல் மாத இதழில் ஆகஸ்ட் 2018 பிரசுரமானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு.வே. கணேஷ்வர்.

அன்று காலை சின்னான்களின் (Red-vented Bulbul) தொடர்ச்சியான எச்சரிக்கை ஒலி கேட்டு வெளியே வராமல் இருக்க முடியவில்லை. வீட்டின் பின்புறம் என்பதால் பைனாகுலரோ காமிராவோ எடுத்துக்கொள்ளவில்லை. சுமார் ஒரு நிமிடம் இருக்கும்; உடலில் சில வரிகள் கொண்ட ஒரு வெள்ளைப் பூனை மறைந்திருந்தது கண்ணில் பட்டது. கூடு ஏதேனும் அருகில் இருக்கலாம். நீண்ட நேரம் கத்தினாலும் பூனையைத் தாக்க சின்னான்களுக்குத் துணிவில்லை.

Tabby-Cat
உடலில் வரிகளோடு பூனை. பட உதவி: petsworld.in

வழக்கம் போலவே கரிச்சான் (Black Drongo) உதவிக்கு வந்து பூனையை விரட்ட முயற்சித்தது. ஆனால் அந்தத் தாக்குதல் முழு மனதோடு நிகழ்த்தப்படாதது சற்றே ஆச்சரியம் அளித்தது. அதன் இணை உடன் இல்லாதது காரணமாக இருக்கலாம். பூனையோ எதையும் கண்டு கொள்ளாமல் கூட்டைக் கண்டுபிடிப்பதில் முனைப்பாக இருந்தது.

கரிச்சானின் திட்டம்

கரிச்சான் சற்று அமைதியாக அமர்ந்து யோசித்தது. பின் தனது எச்சரிக்கை ஒலியை (Alarm call) அதிக சத்தத்துடனும், புள்ளி ஆந்தை மற்றும் வல்லூறு போலவும் ஒப்புப்போலி ஒலி (Mimicry) எழுப்ப ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் ஒரு மைனா ஜோடியும் ஒரு அண்டங்காக்கையும் அங்கு வந்தன. உடனடியாக மைனாக்கள் கத்த ஆரம்பித்தாலும் தாக்கத் தயங்கின. அண்டங்காக்கை தாக்க முற்பட்ட போது தான் மைனாக்களும் கரிச்சானும் இணைந்து கொண்டன. இந்த மும்முனைத் தாக்குதல் முயற்சியால் எரிச்சலடைந்த பூனை அவ்விடம் விட்டு ஒரு வித ஏமாற்றத்துடன் சென்றது. என் காலை உணவிற்குத் திரும்பிய போது அந்தக் கரிச்சான் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த வல்லூறின் பின் பாய்ந்தது.

Black_drongo_(Dicrurus_macrocercus)_Photograph_by_Shantanu_Kuveskar
கரிச்சான். படம்: ஷாந்தனு குவேஷ்கர்

இது போன்ற பாதுகாப்புக் கருதியே சின்னான்கள், புறாக்கள், தவிட்டுக்குருவிகள், மாங்குயில்கள், கரிச்சான்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் கூடமைக்கும். நம்மைச் சுற்றியுள்ள பொதுப் பறவைகளின் மேல் சிறிது கவனம் செலுத்தினால் இது போன்ற பல அற்புதத் தருணங்கள் நம் அனைவருக்கும் வசப்படும்!

அன்றைய தினத்தின் பிற சுவாரசியங்கள்

–கதிர்க்குருவி (Plain Prinia), சாம்பல் கதிர்க்குருவி (Ashy Prinia), காட்டுக் கதிர்க்குருவி (Jungle Prinia) என மூன்று கதிர்க்குருவி இனங்களின் ஒலிகளையும் ஒரே சமயத்தில் கேட்டது.

–காலை வேலைகளுக்குப் பின் வேப்பமர நிழலில் இளைப்பாறும் போது ஒரு ஆண் கருந்தலை மாங்குயில் (Black-headed Cuckooshrike) தலைக்கு சில அடிகள் மேலே அமர்ந்து சத்தமாகக் கத்தியது புத்துணர்ச்சி அளித்தது.

–வீட்டின் முகப்பில் உள்ள மாதுளை மரத்திலிருந்து சின்ன மலர்கொத்தி (Pale-billed Flowerpecker) ஒன்று கூடு கட்டத் தேவையான சிலந்தி வலையை சேகரித்துக் கொண்டிருந்தது.

–சிறிய பஞ்சுருட்டான் (Green Bee-eater) ஜோடி தனது மூன்று இளம் குஞ்சுகளுக்கு உணவூட்டியக் காட்சி சிலிர்க்க வைத்தது.

–வீட்டருகே வலம் வரும் கீரி (Common Mongoose) ஒன்று அறுவடை செய்த வயலில் மேய்ந்து கொண்டிருந்த கவுதாரிகளின் (Grey Francolin) பக்கம் சென்றது. இதை சிறிதும் எதிர்ப்பாராத கௌதாரிகள் ஒரு வித்தியாசமான ஒலி எழுப்பி ஓடிச் சென்றன. கீரிப்பிள்ளை கௌதாரிகளைத் தாக்கும் நிகழ்வுகள் ஏதும் உள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால் நான் பார்த்த பொழுது கீரி தற்செயலாக அவ்வழியே வந்தது போலத்தான் தெரிந்தது; தாக்குவதற்கு அல்ல.

–மாலை நெருங்கிய வேளையில் மூன்று குயிலினங்களின் பாட்டு – குயில் (Asian Koel), சுடலைக் குயில் (Pied Cuckoo), அக்காக் குயில் (Common Hawk-Cuckoo) திசை எங்கிலும் எதிரொலித்தது.

–பல நாட்கள் தேடி உள்ளேன். எப்படியோ அன்று பைனாகுலரின் உதவியோடு ஒரு முறை இரவு நேரத்தில் சத்தமிட்டு அம்மாவை பயமுறுத்தியக் கொம்பன் ஆந்தை (Indian Eagle Owl) பாறைகளுக்கு இடையே மறைந்திருந்ததைக் கண்டுபித்து விட்டேன்.

IEO K
பாறைகளுக்கிடையில் கொம்பன் ஆந்தை

–வீட்டிற்குப் பின் இருக்கும் மலைகளின் போர்வையில் கதிரவன் உறங்கச் சென்ற பொழுது அதன் கடைசி ஒளிக்கதிர்கள் பெரிய பாறையின் மீது நின்றிருந்த ஒரு ஆண் மயிலின் மேல் பட்டுத் தெரித்த அழகை வர்ணிக்க சொற்களே இல்லை!

–இரவு உணவுக்குப் பின் தூங்கச் செல்கையில் அக்காக் குயில் மற்றும் புள்ளி ஆந்தையின் (Spotted Owlet) ஒலிகள் இரு பக்கங்களில் இருந்து தாலாட்ட நாளைய தினத்தை எதிர்நோக்கி நிம்மதிப் பெருமூச்சுடன் தூங்கிவிட்டேன்.