பறவைகளோடு என் முதல் பயணம்

எழுத்து: செந்தில் குமார், தலைமை ஆசிரியர் (மற்றும் பறவை ஆர்வலர்), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணம்புதூர், சேலம்.

பறவைகளைப் பற்றி பெரிதும் அறிந்திராத சாதாரண மக்களில் நானும் ஒருவனாகத் தான் இருந்து வந்தேன். இப்போது பறவைகளின் ஒலிகளைக் கேட்டால் திரும்பிப் பார்க்கிறேன். சாலைகளில் பயணிக்கும் போதெல்லாம் வானில் பயணிக்கும் பறவைகளை இயல்பாகப் பார்க்கத் தொடங்குகிறேன். என்னுள் எழுந்துள்ள மாற்றங்கள் எனக்கே வியப்பாக உள்ளது. இத்தனை ஆண்டுகாலம் இந்தப் பறவைகளை எப்படிப் பார்க்காமல், அவற்றின் இனிய ஒலிகளைக் கேட்காமல் இருந்திருக்கிறோம் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது. நகர வாழ்க்கை, கைபேசி, தொலைக்காட்சி என்று சுற்றுப்புறத்தை உற்றுநோக்காமலே இருந்துவிட்டோம் என்று புரிந்தது. பறவைப் பார்த்தலில் ஈடுபட என்னைத் தூண்டியவை எவை என்று சிந்தித்தப் போது தான் அதனை எழுத வேண்டுமென்ற எண்ணமும் பிறந்தது.

திருப்புமுனைத் திருவிழா

பறவைகள் மீதான ஆர்வத்தை என்னுள் சிறகை விரித்து மலர வைத்த நாள் 2017 ஜனவரி 28ம் தேதி. ஆம், ஒரு வருடத்திற்கும் மேல் கடந்து விட்டது. இருப்பினும் அன்றைய நிகழ்வுகள் இன்றும் பசுமையான நினைவுகளாகவே நெஞ்சில் நிழலாடுகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (சேலம்), கொங்கணாபுரத்தில் உள்ள யுனிவர்சல் பள்ளியில் இரண்டு நாட்கள் மாபெரும் அறிவியல் திருவிழாவை நடத்தினார்கள். அறிவியல் இயக்கத்தோடு அப்போது பெரிய தொடர்பு இல்லை என்றாலும் நண்பர் ஜெயமுருகன் கேட்டுக்கொண்டதற்கிணங்க எங்கள் பள்ளி மாணவர்கள் 19 பேர் மற்றும் எங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டேன்.

Science Fest
அறிவியல் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியில் மாணவர்களின் ஒரு பகுதி. படம்: சு.வே. கணேஷ்வர்.

அந்த ஆர்வலரே நான் தான் சார் 

அத்திருவிழாவில் எளிய அறிவியல் பரிசோதனைகள், இரவு வான்நோக்குதல், பொம்மலாட்டம் எனப் பல அமர்வுகள் இருந்தன. அதில் ஒன்று தான் இந்தப் பறவை பார்த்தல் நிகழ்வும். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. இயல்பாகவே ஏழு மணிக்கு எழும் என்னை விடிந்தும் விடியாததுமாய் ஐந்து மணிக்கே எழுப்பி விட்டது எரிச்சலாகத் தான் இருந்தது.

பறவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது. நமக்குத் தெரியாதப் பறவைகளா? என்ற எண்ணங்களுடன் புறப்பட்டேன். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் தயாராக இருந்தார்கள். அவர்களோடு நானும் என் பள்ளி மாணவர்களும் இணைந்து கொண்டோம். சரி, பறவைகளைப் பற்றி அதற்குரிய பறவை ஆர்வலர்களிடம் இருந்து கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தில் இருந்த போது இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் நின்றிருந்தார். அவரைப் பார்த்து, “தம்பி, நீங்களும் பறவைகளைப் பார்க்கத்தான் வந்தீர்களா?” என்று கேட்டேன். அவரும் “ஆமாம் சார்,” என்றார். எப்படியெல்லாமோ நேரத்தை செலவழிக்கும் இன்றைய இளைஞர்களின் மத்தியில் பறவைகளைப் பார்க்க இவரும் மாணவர்களோடு சேர்ந்து கொண்டது சற்றே ஆச்சரியமாக இருந்தது. “பாருங்க தம்பி, நாம எல்லாரும் வந்துட்டோம். ஆனா, பறவைகளைப் பற்றி விளக்கிச் சொல்ல வேண்டிய ஆர்வலர் இன்னும் வரலை,” என்றேன்.

வாழ்க்கைக்கு சிறகுகள் முளைத்தன 

அவர் சிரித்துக்கொண்டே, “அது நான் தான் சார். புறப்படலாமா?” என்று கேட்டார். ஐம்பது வயதிற்கும் அதிகமான ஒருவரை எதிர்ப்பார்த்திருந்த எனக்கு ஒரு 20 அல்லது 23 வயதுடைய ஒரு இளைஞர் தான் அந்தக் கூட்டத்தை அழைத்துச் செல்லும் தலைமைப் பொறுப்பில் உள்ளார் என்று நினைத்த போது என்னுடைய சிந்தனையே எனக்கு வெட்கத்தைக் கொடுத்தது. பறவை நோக்குதலுக்குப் புறப்பட்டோம். அது என் வாழ்க்கையில் மெல்லியச் சிறகுகளை முளைக்கச் செய்து பாதையை மாற்றிக் காட்டியது.

நம்மைச்சுற்றி எத்தனை வகையான நிறங்களுடன் பலவித ஒலிகளுடன் பறவைகள் பறந்து திரிவது பிரம்மிப்பாக இருந்தது. சின்னான், கரிச்சான், ஊதா தேன்சிட்டு, தவிட்டுக்குருவி, பனங்காடை என்று இத்தனை நாட்களாக இந்தப் பறவைகளை எல்லாம் கடந்து சென்றும் நான் தெரிந்து கொள்ளாமலே இருந்தது எப்படி என்று என்னுள் ஒரு வினாவை எழுப்பியது.

8 PUSU by Ravi
முழுமையாக வளர்ந்த இனப்பெருக்க நிலையில் உள்ள இறகுகளுடன் ஆண் ஊதாத் தேன்சிட்டு. படம்: Dr. ம. ரவி

42 ஆண்டுகள் கடந்தும் எனக்கு இவையெல்லாம் தெரியாத பொழுது ஒரு இளைஞர், பறவைகளைப் பற்றி தெளிவான விளக்கத்தைக் கொடுத்துக்கொண்டு வருகிறாரே என்று வியப்பாக இருந்தது. பறவைகளின் அழகு என்னை வெகுவாக ஈர்த்தது. காகம், குருவியைப் பற்றி மட்டுமே அறிந்திருந்த எனக்கு அந்த ஒரு மணி நேர நிகழ்வில் 20 வகையானப் பறவைகளைக் கண்டு மகிழ்ந்தேன்.

 இப்போது குடும்பத்தோடு பறக்கிறோம் 

இந்தப் பள்ளியைச் சுற்றியே இத்தனை வகையானப் பறவைகள் வசிக்கின்றன என்றால் நீர்நிலைகள், காடுகள், மலைகள் போன்ற வாழிடங்களில் எவ்வளவு அழகான, அரிய பறவைகள் வாழும்? அவற்றைப் பார்ப்பது தான் முதல் வேலை என்ற எண்ணம் என்னுள் துளிர்த்தது. என்னைக் காட்டிலும் இந்த அறிவியல் திருவிழாவில் பறவைகள், ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் என் மகன் சுப்ரமணிய சிவா, என் மனைவி வடிவுக்கரசியை மிகவும் ஈர்த்தன. எங்கள் இருவரை விடவும் சிவா, மிகத் தீவிரமாக பறவைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.

அவனை காலையில் எழுப்ப பல முறை தட்ட வேண்டிய அவசியமில்லை. அவனே ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டு அருகிலுள்ள பவளத்தானூர் ஏரிக்குச் செல்லலாம் என்று என்னை விரட்டுகிறான். மேலும் எங்கள் பள்ளி மாணவர்களும் பறவை உற்றுநோக்குதல் பணியை செவ்வனே செய்து வருகிறார்கள். அடுத்த நாள் முதல் ஏரிகள், நீர்த்தேக்கங்கள், மலைகள், காடுகள் என பறவைகளைக் காண பல இடங்களுக்கு நாங்களும் குடும்பத்தோடு பறக்கத் துவங்கிவிட்டோம். எங்களைப் போல நீங்களும் சிறகு விரிக்க என் வாழ்த்துகள்!