தேடி வந்த பூநாரைகள்

தி இந்து நாளிதழின் “உயிர் மூச்சுப்” பகுதியில் பிப்ரவரி 14, 2015 அன்று வெளியானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு.வே. கணேஷ்வர்.

வருடந்தோறும் உலகம் முழுவதும் ஒரே வேளையில் நடைபெறும் மாபெரும் நிகழ்ச்சியான Great Backyard Bird Count (GBBC) என்னும் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் பங்கு கொள்வது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் பறவைகளை இனங்காணுதல் பற்றி படித்துக் கொண்டிருந்த தருணமது. பல வகையான பறவைகளை வருடந்தோறும் ஒரே வேளையில் கணக்கெடுப்பதன் மூலம் சுற்றுசூழலிலும் காலநிலையிலும் ஏற்படும் மாற்றங்களை கணிக்க முடியும். இதன் வாயிலாக பறவைகளின் எண்ணிக்கைகளில் ஏற்படும் மாறுதல்களை அறிந்து அதற்கேற்ப மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முயற்சிகளில் நம்மாலான பங்களிப்பை செலுத்த முடியும். இதில் பொதுமக்கள், மாணவர்கள், பறவை ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் என இயற்கை பாதுகாப்பில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கு பெறலாம்.

கணக்கெடுப்பின் முதல் நாளான பிப்ரவரி 14, நானும், ஒரு காடையின் மூலம் அறிமுகமான ஐஷ்வர்யா அக்காவும் கன்னங்குறிச்சி ஏரிக்கு வந்தடைந்தோம். தவிட்டுக்குருவிகளின் கீச்சிடும் சத்தம் எங்களை வரவேற்றது. இரவு வேட்டைக்குப் பின் மூன்று இராக்கொக்குகள் தங்கள் இருப்பிடம் நோக்கி புறப்பட்டன.

சேலத்து விருந்தாளிகள்

சரியாக 6.25 மணிக்கு எனக்கும் சூரியனுக்குமிடையில் வெகுதூரத்தில் ஏழு பெரிய பறவைகள் செல்வது மங்கலாகத் தெரிந்தது. சங்குவளை அல்லது நத்தைக்குத்தி நாரைகளாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்து கொண்டே என் இருநோக்கியில் பின்தொடர்ந்தேன். அவை சற்று இடதுபுறம் திரும்பியதும் நான் ஏதோ கனவு உலகத்தில் மிதப்பது போலத்தோன்றியது. நான் என்ன பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. வெறும் ஒளிப்படங்களாகவும் இயற்கை வரலாற்றுக் கதாநாயகர்களில் தலைசிறந்தவரான சர் டேவிட் அட்டன்பரோவின் காட்டுயிர்த் திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்து ரசித்தவற்றை என்றாவது ஒரு நாள் நேரில் காண பழவேற்காடோ அல்லது கோடியக்கரையோ செல்ல வேண்டுமென்பது பல வருட கனவாக இருந்தது. அவ்விரு இடங்களில் இவற்றைப் பார்த்திருந்தால் அதில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால் நான் நின்று கொண்டிருப்பதோ சேலம் நகரின் ஒரு முக்கியப் பகுதியான அஸ்தம்பட்டியிலிருந்து சிறிது தொலைவே அமைந்துள்ள ஒரு ஏரி. நீண்ட மெல்லிய கழுத்தும் குச்சி போன்ற கால்களும் வளைந்த அலகும் காலை வெயிலில் அவற்றின் இளஞ்சிவப்பு இறகுகளும் மின்னிக்கொண்டு அவை ஏழும் பெரிய பூநாரைகள் என்று காட்டிக்கொடுத்தன.

உடனிருந்த அக்காவிடம் சொல்லி நான் மகிழ்ச்சியில் துள்ளத் தொடங்கினேன். அவை அங்கிருந்த ஒரு மணி நேரம் முழுவதும் என் கண் பார்வை அவற்றின் மீதிருந்து சிறிதும் சிதறவில்லை. சேலத்தில் முதல் முறையாக புகைப்பட ஆதாரத்தோடு பெரிய பூநாரைகளை பதிவு செய்ய உதவிய என் சிறிய காமிராவை நினைத்து பெருமை கொண்டேன்.

OLYMPUS DIGITAL CAMERA
கன்னங்குறிச்சி ஏரியில் ஏழு பெரிய பூநாரைகள். படம்: கணேஷ்வர்

என் அம்மாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு எந்த வேலை இருந்தாலும் அதை அப்படியே விட்டு விட்டு உடனடியாக ஏரிக்கு வருமாறு அழைத்தேன். அம்மா வந்திறங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் அவை அங்கிருந்து மறைந்தன. அவை சென்ற பிறகு நான்  இதைப்பற்றி உடனடியாக அனுப்பியிருந்த மின்னஞ்சலுக்கு பறவையியல் ஆராய்ச்சியாளர்கள் ஜெகநாதனும் சுஹேல் காதரும் வாழ்த்து தெரிவித்தனர்.

வடிகட்டி அலகுகள்

உலகின் ஆறு வகையான பூநாரைகளுள் மிகப் பெரியதும் அதிக எண்ணிக்கையில் பரவியிருப்பதும் இந்த பெரிய பூநாரைகளே (Greater Flamingo). இந்தியாவின் குஜராத் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் இவை குளிர்க் காலங்களில் தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு ஆயிரக்கணக்கில் வலசை வரும். நம் வீட்டில் உபயோகிக்கும் வடிகட்டியைப் போலவே தனித்தன்மை வாய்ந்த இவற்றின் அலகும் நீரிலுள்ள மிதவைத் தாவர நுண்ணுயிர்கள், நீலப்பச்சை பாசி, மெல்லுடலிகள், ஆகியவற்றை வடிகட்டி உணவாக உட்கொள்ளப் பயன்படுகிறது. பூநாரைகளின் இறக்கைகளுக்கு நிறமளிப்பது அவை உண்ணும் உணவிலுள்ள பீட்டா கரோட்டின் (Beta-carotene) என்னும் ஒரு நிறமி. இந்த கரோட்டின் அளவு உலகின் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு மாதிரி இருக்கும். இதன் காரணமாகத்தான் அமெரிக்காவில் காணப்படும் பூநாரைகள் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிறத்திலும் இந்தியாவில் உள்ள பூநாரைகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றன. ஒரு வேளை கரோட்டின் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாது போனால் இறக்கைகளில் உள்ள இளஞ்சிவப்பு நிறமானது இல்லாமல் போய்விடும்.

அம்மாவும் அக்காவும் சென்ற பிறகு பிற்பகல் வரை பல வகையான வலசைப் பறவைகளை கணக்கெடுத்துக் கொண்டிருந்தேன். பொறி மண்கொத்தி, சதுப்பு மண்கொத்தி, சூரமாரிகள், மீசை ஆலா, நீலவால் பஞ்சுருட்டான்கள், சாம்பல் வாலாட்டிகள் போன்ற பறவைகளையும் பார்க்க முடிந்தது.

பறப்பதில் ஒழுங்கு

நான் பார்த்த ஏழு பூநாரைகள் பறப்பதில் ஒரு ஒழுங்கு தெரிந்தது. சிறிதும் பிசகாமல் கவட்டை வடிவத்தில் பறந்து கொண்டிருந்தன. பறவைகளில் வாத்துகள், நாரைகள் போன்றவை வலசை செல்கையில் புவி ஈர்ப்பைக் குறைக்கவும் சக்தியை சேமிக்கவும் கவட்டை வடிவில் பறப்பதாகவும் தனியாக பறக்கும் போது இறக்கைகளை அடிப்பதைவிட குறைவாகவே அடித்ததாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாரை அல்லது வாத்துகளில் ஒன்று தன் இறக்கையை கீழ்நோக்கி அடிக்கையில் ஏற்படும் காற்றின் உதவியால் அடுத்த பறவையின் இறக்கைகள் மேலே எழுகின்றன. இவ்வாறு தங்களுக்குள் உதவிக் கொள்வதன் மூலம் அனைத்துப் பறவைகளுமே வலசையை வெற்றிகரமாக முடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

OLYMPUS DIGITAL CAMERA
கவட்டை வடிவில் பறக்கும் பூநாரைகள். படம்: கணேஷ்வர்

சரியாக ஒரு வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வானாலும் இன்னும் உயிரோட்டமான நினைவுகளாக நெஞ்சில் வலம் வருகிறது. அன்று அனுபவித்த அதே மகிழ்ச்சியோடு இந்த வருட கணக்கெடுப்பை ஆவலோடு எதிர்ப் பார்த்துள்ளேன். நீங்களும் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் பங்குகொள்ள gbbc.birdcount.org மற்றும் BirdCount India ஆகிய இணையதளங்களை பாருங்கள்.

இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வரும் பறவைகளாகட்டும் வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகளாகட்டும் அனைத்துமே நம்மை நம்பி நல்ல சூழலுக்காகவும் உணவிற்காகவும் வருகின்றன. விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் தமிழ்நாட்டில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் மதிப்பளித்து பாதுகாப்போம்.

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்.