சேவலும் பெட்டையும்

எழுத்து: வை. கலைச்செல்வன், தலைமை ஆசிரியர் (மற்றும் பறவை ஆர்வலர்), ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜம்பூத்துமலை, சேலம்.

எல்லாப் பறவைகளிலுமே ஆண் பறவைகளை சேவல் என்றும் பெண் பறவைகளை பெட்டை என்றும் சொல்றீங்களே? இதை உறுதிப்படுத்திகிட்டீங்களா?” என்று கேட்டார் சகோதரியொருவர். “அட! இவ்வளவு நாளா நமக்கு இது தோணலையே? முன்னோர் சொன்னதை அப்படியே சொல்வது மரபென்றாலும் அதனை உறுதிப்படுத்திக் கொள்வது தவறில்லையே” என்றெண்ணியது மனது.

தூங்கா இரவில் தொல்காப்பியம்

அப்படி எண்ணியபோது நள்ளிரவு மணி ஒன்று. நமக்குத்தான் எதாச்சும் கேள்வி தோணுச்சுன்னாவே தூக்கம் வராதே! தொல்காப்பியம் எடுத்தேன். நம்பத்தகுந்த பழமையான இலக்கண நூல். நிச்சயம் இதில் பதில் இருக்கும். இனி தொல்காப்பியர் சொல்வதை அப்படியே உங்களுக்கு வழங்கியிருக்கிறேன். இங்கு நான் சொல்லியிருக்கும் கருத்துகள் அனைத்தும் பறவைகள் பற்றியே சொல்லியிருக்கிறேன்.

இளமைப்பெயர்கள்

இளமைப்பெயர்களாக பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்னும் ஒன்பது பெயர்கள். இதில் பார்ப்பு, பிள்ளை என்பவை இரண்டும் பறவைகளுக்குப் பொருந்தும்.

ஆண்பால் பெயர்கள்

ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்ற பதினைந்தும் ஆண்பால் பெயர்கள்.

பெண்பால் பெயர்கள் 

பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்ற பதின்மூன்றும் பெண்பால் பெயர்கள்.

விலங்கினங்கள் அனைத்தும், மனிதர்களில் விலங்கின் இயல்பைக் கொண்டிருப்பவரும் ஐந்தறிவு உடையவர்கள். ஐந்தறிவு என்பது உடம்பு, நா, மூக்கு, கண், காது இவற்றால் நாம் பெறுவது. இப்படிப் பார்க்கும்போது பறவைகளுக்கு ஐந்தறிவு என்பது தெளிவாகிறது.

INPE-Ganeshwar
ஆண் மயில். படம்: கணேஷ்வர்

சங்க இலக்கியக் குறிப்புகள் 

சிறகுடைய பறவை இனங்கள் எல்லாவற்றிலும் ஆண் பறவையை சேவல் எனலாம். ஆனால் மயிலுக்கு இது பொருந்தாது. ஆண் மயிலை ‘போத்து’ என்று கூற வேண்டும். ‘எழால்’ பறவையிலும் ஆண் இனம் ‘போத்து’ என அழைக்கப்பட வேண்டும்.

‘வங்காக் கடந்த செங்காற் பேடை எழாலுற வீழ்ந்தென’ என்னும் குறுந்தொகைப் பாடல் (151) , ‘நிழலறு நனந்தலை யெழாலேறு குறித்த கதிர்த்த சென்னி’ என்னும் அகநானூற்றுப் பாடல் (103) ஆகிய சங்க இலக்கியக் குறிப்புகளைக் கொண்டு ‘எழால்’ என்பதனை ‘FALCON’ என்று வரையறுக்கிறார் முனைவர் க.ரத்னம் ஐயா அவர்கள். எனவே மயிலுக்கும், எழால் இனத்தின் ஆண்பறவையையும் ‘போத்து’ என்று சொல்லலாம்.

எல்லா பறவை இனங்களிலும் உள்ள பெண் பறவைகளைப் பெட்டை எனலாம். ஒட்டகம் , குதிரை, கழுதை, மரைமான் ஆகிவற்றின் பெண்ணினைப் பெட்டை என்று கூறலாம் என்று சொல்லிவிட்டு தொடர்ந்து “புள்ளும் உரிய அப்பெயர்க்கு என்ப” என்று சொல்வதன் மூலம் பெண் பறவைகளுக்கு பெட்டை என்று கூறலாம் என அறிய முடிகிறது. தொடர்ந்து அடுத்த பாடலில் பேடை, பெடை என்னும் சொற்களும் பறவைகளில் பெட்டை என்பதைக் குறிக்கும் என்கிறார்.

அடுத்தடுத்த பாடல்களில் கோழி, கூகை, மயில் ஆகிய மூன்று பெண் பறவைகளுக்கு மட்டும் பெட்டை என்னும் சொல்லுக்குப் பதிலாக ‘அளகு’ என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார். அதாவது, பெண் மயில் — மயில் அளகு, பெண் கூகை – கூகை அளகு, பெண் கோழி – கோழி அளகு. கோழிக்கே இத்தனை நாளா பாருங்க நாம பெட்டைக் கோழின்னு தவறுதலா சொல்லிக்கிட்டிருக்கோம்! இப்படி சொல்லலாம்.

Barn-Owl-Steve-Garvie-Wikimedia-Commons
கூகை (அ) வெண்ணாந்தை. படம்: ஸ்டீவ் கார்வி/விக்கிமீடியா

இதில் கோழி, மயில் எல்லோரும் அறிந்தது. கூகை என்பது வெண் ஆந்தையைக் (Barn Owl) குறிக்கும். இதுவரை தொல்காப்பியர் பறவைகளில் சேவல், பெட்டை என்று எவற்றைச் சொல்லலாம், எவற்றிற்கு விலக்களித்துள்ளார் என்பதைத் தொகுத்துக் கூறியுள்ளேன்.

மயில், எழால் இவை இரண்டைத் தவிர மற்ற எல்லாப் பறவை இனங்களிலும் ஆண் பறவையை ‘சேவல்’ என்றும் கூகை, மயில், கோழி இம்மூன்றைத் தவிர மற்ற பறவை இனங்களில் உள்ள பெண் பறவைகளை ‘பெட்டை’ எனவும் கூறலாம்.

2 thoughts on “சேவலும் பெட்டையும்”

  1. சேவல் பெட்டைக்கு அருமையான விளக்கம் , அருமை

Comments are closed.