நான் கண்ட அதிசயம்

எழுத்து, படங்கள்: திருமலை. ராதி. வெங்கட்ராமன்

அன்று பணிச்சுமையினால் ஏற்பட்ட கோபமும் மனச்சோர்வும் என்னை பாதித்திருந்தது. அதைக் களைய ஒரே தீர்வு என்னை மகிழ்வூட்டும் பறவைகளைக் காண வேண்டும், படம் எடுக்க வேண்டும் அவ்வளவுதான். வீட்டிலிருந்து ஒரு மணி நேரம் பயணித்து பிற்பகல் 3 மணி அளவில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள என் விருப்பமான இடத்திற்குச் சென்றேன்.

மனச்சோர்வை நீக்கிய காட்டு ஆந்தை

பறவைகளின் ரீங்காரமும், அவை காதல் கொள்ளும் அழகும், இரை தேடும் முறையையும் பார்த்த நொடியே என் மனதில் இருந்த அத்தனை பாரமும் விலகி புத்துணர்ச்சிப் பிறந்தது. ரசித்துக்கொண்டே ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்ததில் மணி 5 ஆனது. அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்குச் சென்றேன். அங்கே சின்ன காட்டு ஆந்தை (Jungle Owlet) ஒன்று அழகாக உட்கார்ந்து அங்கும் இங்குமாக பார்த்துக் கொண்டிருந்தது. அது மேலும் கீழும் தலையை அசைக்கும் அழகை எவ்வளவு நேரம் ரசித்திருப்பேன் என்கிறீர்கள்; 5 நிமிடம், 10 நிமிடமா? இல்லை! 35 நிமிடங்கள்! ரசிக்க ரசிக்க என் மனச்சோர்வு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. தேநீர் அருந்திவிட்டு வீட்டுக்குச் செல்லலாமென்று கிளம்பினேன். மாலை 6 மணி இருக்குமென்று நினைக்கிறேன். இருள் சூழ்ந்த அமைதி.

JUOW_Venkatraman
சின்ன காட்டு ஆந்தை

நான் பட்ட பாடு

சாலை ஓரத்திலுள்ள ஒரு சிறிய மரக்கிளையில் பெரிய உடல்வாகு கொண்ட பறவை அமர்ந்திருப்பதைக் கண்டேன். ஏதோ அரிய பறவை என்று மட்டும் உணர்ந்தேன். சாலையோ சிறியது; என்ன செய்வது! வெளிச்சம் இல்லை, வாகனத்தை அங்கே நிறுத்தக்கூடாது. நிறுத்தினால் வரும் வாகனத்திற்கு இடையூறு. அதைவிட பெரிய தொந்தரவு இப்பறவைக்கு என்றெண்ணி எவ்வளவு ஓரமாக நிறுத்த முடியுமோ நிறுத்தினேன். எனக்கோ எப்படியாவது ஒரு ஒளிப்படம் எடுக்கவேண்டுமென்று ஆவல். வாகனத்தின் கதவை திறந்தால் பறந்துவிடுமோ என்று அச்சம். காரின் பின்னிருக்கைக்குச் சென்று எனது ஒளிப்படக் கருவிகளை எடுத்து கொண்டு இடது கதவை திறந்து, இருந்த சிறிய இடத்தில் எப்படியோ இறங்கிவிட்டேன். அங்கே பார்த்தால் பறவை இல்லை! எனக்கோ அழுகையே வந்துவிட்டது. திடீரென எதிர்ப்புறமாக வந்த வாகனத்தின் வெளிச்சத்தில் பார்த்தால் வேறு ஒரு மரத்தில் அமர்ந்திருந்தது. ஒளிப்படமும் எடுக்க வேண்டும் ஆனால் பறவையையும் தொந்தரவு செய்யக் கூடாது. எப்படியோ தவழ்ந்து சென்று ஒரு மறைவிடத்தில் நின்று கொண்டேன்.

துளியும் வெளிச்சம் இல்லாததால் காமிராவின் ISO 10000க்கு ஏத்தி விட்டேன்; Manual focusல் முயன்றும் முடியவில்லை. ஒரு யோசனை! Flash மற்றும் magmod diffuserஐப் பயன்படுத்தி எடுக்கலாமே என்று. ஆனால் அவையெல்லாம் காரில் இருந்தன. வேறென்ன செய்ய முடியும்; மீண்டும் தவழ ஆரம்பித்தேன்.  அவ்வழியே வந்த வாகனத்தில் இருந்தவர்கள் என்னை பார்த்துக் கொண்டே சென்றனர். ஏதோ நினைத்திருக்கலாம் ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் எனது magmod diffuser flashன் மீதும் அதை ஒளிப்படக் கருவியின் மீது மாட்டிக் கொண்டு மீண்டும் தவழ ஆரம்பித்தேன். எனக்கோ flash பயன்படுத்தி எடுக்க மனமில்லாமல், ஒளியின் வீச்சை முழுக்கக் குறைத்தேன். Diffuser பயன்படுத்தும் போது ஒளி மென்மையாக விழுமென்று எனக்குள்ளே ஓர் ஆறுதல். சரியென்று படமெடுக்க முயற்சி செய்தால் அப்பொழுதும் என் முயற்சி வீணாகிப் போனது. நேரம் செல்லச்செல்ல ஒளிப்படக்கருவிகள் அனைத்தின் எடையையும் என்னால் தூக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. எப்படியோ மீண்டும் முயற்சித்து ஒரு படத்தை எடுத்தேன். ஆனால் ஒளி பறவையின் கால்களில் விழுந்தது. Magmod diffuserன் எடை flashல் நிற்கவில்லை. என்ன செய்வது எப்படியோ வலது கையால் ஒளிப்படக் கருவியின் shutter buttonஐ பிடித்துக் கொண்டு, இடக்கையின் பெரு விரலால் focusஐத் திருப்பியவாறு கட்டை விரலால் diffuserஐ நேராக தாங்கி கொண்டு manual focusல் மூன்று படங்கள் எடுத்து விட்டேன்.

அந்த அதிசயத்தின் பெயர் பழுப்பு காட்டு ஆந்தை

மீண்டும் தவழ்ந்து வாகனத்தில் வந்தமர்ந்து எடுத்தப் புகைப்படங்களை  பார்த்தால் எனக்கோ பேரானந்தம். ஆனால் என்ன பறவை என்று என்னால் யூகிக்க முடியவில்லை. இவ்வளவு நேரம் எந்த தொந்தரவும் இல்லாமல் எனக்காக இப்பறவை அங்கே உட்கார்ந்து கொண்டிருந்ததே பெரிய விடயமாகக் கருதி அதற்கு நன்றி கூறிவிட்டு புறப்பட்டேன். வீட்டிற்கு வரும்போது அத்தனை பாரமும் அணைந்து மன மகிழ்ச்சியுடன் இரவு 9 மணிக்கு நுழைந்தேன். என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் படங்களைக் காட்டிவிட்டு, இரவு உணவை முடித்த பின் எடுத்த படத்தைக் கணினியில் பதிவிறக்கம் செய்து பார்த்தால் என் இதயமும் ஒரு பறவை போல மகிழ்ச்சியில் சிறகடித்தது! என்ன பறவையாக இருக்குமென்று புத்தகத்தைப் பார்த்தால் நான் நினைத்த பறவைக்கும் புத்தகத்தில் இருந்த பறவைக்கும் நிறைய வித்தியாசம். பறவைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றால் என் நினைவிற்கு வரும் இளம் வயது நண்பர் சேலத்தில் ஒருவர் உள்ளார்.

உடனே அப்படங்களை அவரது கைபேசிக்கு அனுப்பினேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. எனக்கோ மிகுந்த அசதியால் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு படுத்துவிட்டேன். நல்ல தூக்கம். திடீரென ஒரு சிறிய சத்தம் எனது கைபேசியில் ஒலித்தது. பார்த்தால் அவர் 5 குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். எங்கே எடுத்தது, எப்பொழுது, சீக்கிரம் சொல்லுங்கள் என்று; நான் விவரங்களைச் சொன்னவுடன் அவர் இது பழுப்பு காட்டு ஆந்தை (BROWN WOOD OWL) என்றும், சேலத்தில் எடுக்கப்பட்ட இப்பறவையின் முதல் ஒளிப்படம் இதுவே என்றார். இப்படி ஒரு அரிய செய்தியைச் சொன்னால் தூக்கம் வருமா என்ன? மீண்டும் கணினியில் உட்கார்ந்து கூகுளில் ஆராய ஆரம்பித்தேன். பறவைப் பற்றி ஆராயும்போது பார்த்தால் அது எனக்கு அதிசயமாக இருந்தது. ஆம் அந்த அதிசயத்தின் பெயர் பழுப்பு காட்டு ஆந்தை (Brown Wood Owl)!

BWO by Venkatraman
பழுப்பு காட்டு ஆந்தை BROWN WOOD OWL (Strix leptogrammica)

இரவில் பார்த்த அந்த அதிசயத்தை பகலில் பார்க்க வேண்டுமென்று மூன்று முறை சென்று பார்த்தேன். ஆனால் அது அங்கு இல்லை. அதிசய நிகழ்வு ஒரு முறைதான் வரும் போல! அந்த ஒரு கணமே போதும் என்று தோன்றியது. மீண்டும் அதைத் தேடவோ, தொந்தரவு செய்யவோ மனமில்லை. அவ்வனத்தில் எங்கோ அதன் குஞ்சுகளோடு அவர்கள் இடத்தில் எந்த தொந்தரவும் இல்லாமல் வாழ இறைவனை தினமும் வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

நன்றி பறவையே! நான் உன்னை பார்த்தது, புகைப்படம் எடுத்து ஓர் அதிசய நிகழ்வே. என் உயிர் உள்ளவரை உன்னை மறவேன்.

பறவை நோக்குங்கள்! பேரானந்தம் கொள்ளுங்கள்!