காட்டுத்தீயில் இருந்து காட்டைப் பாதுகாக்க உதவுங்கள்: திரு. ஆ.பெரியசாமி, இ.வ. ப. அவர்கள்

Screenshot (54)

தமிழகத்தினுடைய வனப்பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு பலவகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர், தமிழக அரசினுடைய உயரதிகாரிகளாகிய முதன்மைச் செயலாளர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனப்பாதுகாவலர் ஆகியோர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் மிக அதிக அளவிலே எங்களுக்கு வனத்தை மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க ஒத்துழைப்பு நல்கிக்கொண்டிருக்கிறார்கள். Screenshot (56)

சேலத்தின் மலை வளம்

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 28 சதவிகிதம் நிலப்பரப்பு வனப்பகுதிகளாக அமைந்துள்ளது. சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, பச்சை மலை, பாலமலை, கொல்லி மலை, கோது மலை அதே போன்று கஞ்சமலை, ஏரிமலை இது போல பலவகையான மலைப்பகுதிகள். அங்கே கிட்டத்தட்ட 20,000 குடும்பங்கள் பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள். அது மட்டுமல்லாது இந்த வனப்பகுதிகளுள் மற்றும் மலைப்பிரதேசங்களில் வன உயிரினங்களான மிகப்பெரிய விலங்குகளான காட்டு மாடுகள், கடமான், புள்ளிமான், கரடிகள் அதே போன்று காட்டுப்பன்றிகள், செந்நாய்கள், மற்றும் சில சிறிய உயிரினங்களான ‘ஜாக்கல்’ என்று சொல்லக்கூடிய குள்ளநரிகள் மற்றும் பாம்புகள் மிகுதியாக காணப்படுகின்றன.

kalvarayan_hills_jeg3509
கல்வராயன் மலைப்பகுதி. படம்: ப. ஜெகநாதன்

தீவிரமான நடவடிக்கைகள்

2019ல் விரைவாக கோடைக்காலம் துவங்கிவிட்டது. வனத்துறையின் மூலமாக பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். அதாவது வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்குவது, தீ தடுப்பு செய்யக்கூடிய நடவடிக்கைகள், அதே போன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக வனப்பகுதிகளில் தீக்கோடுகள் போடுவது மற்றும் fire watchers என்று சொல்லக்கூடிய தீ தடுப்பு காவலர்களை நியமித்து அவர்களுக்குத் தேவையான உதவிகள், உபகரணங்கள் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக ஏற்காட்டைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக காட்டுத்தீ மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகளாகிய காட்டு மாடுகளாகட்டும், புள்ளி மான்கள், கடமான்கள் போன்ற பெரிய விலங்கினங்கள் முதல் சிறிய விலங்கினங்களான மயில்கள் மற்றும் காட்டுப்பன்றிகள், முயல்கள் போன்ற விலங்குகள் வனப்பகுதிகளை விட்டு வெளியே வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

நமது மிகப்பெரிய பொக்கிஷம்

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ‘territorial’  என்று சொல்லக்கூடிய ஒன்பது வனச்சரகங்கள் உள்ளன. இந்த ஒன்பது வனச்சரகங்களில் குறிப்பாக சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, பச்சைமலை, கோதுமலை, கஞ்சமலை இது போன்ற பகுதிகளில் வன விலங்குகள் மிகுதியாக காணப்படுகின்றன. இந்த வனவிலங்குகள் வனப்பகுதிகளை விட்டு வெளியே வரக்கூடிய வாய்ப்புகள் மற்றும் சூழல் உள்ளது. இந்த வனவிலங்குகளைப் பாதுகாப்பது நமது மிக முக்கியக் கடமை. வனவிலங்குகளைப் பொறுத்தவரை பொதுமக்களாகிய நீங்கள் எல்லோரும் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ஒத்துழைப்பை நல்கவேண்டும். வனப்பகுதிகளில் இருந்து வெளியே வரக்கூடிய விலங்குகள் அவை அனைத்துமே மக்களுடைய அரசாங்கச் சொத்து. மக்களுடைய சொத்து. அவை நம் நாட்டினுடைய மிகப்பெரிய பொக்கிஷம் என்று சொல்ல வேண்டும்.

Gaur_Male
காட்டு மாடு. படம்: Wikimedia Commons

அவை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள். அவற்றை எந்த வகையிலும் துன்புறுத்தவோ, துரத்தவோ, விரட்டவோ கூடாது. அவை வழி தவறி வெளியே வரும் போது அவற்றை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்புவது நம்முடைய மிகப்பெரிய குறிக்கோளாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக ஏற்பட்டிருக்கக்கூடிய காட்டுத்தீயில் இருந்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு பெரிய அளவிலே  உதவிகள் செய்திருக்கிறார்கள். நமக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பின் மூலமாகவும் தான் இந்தத் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

காட்டுத்தீ எப்படி ஏற்படுகிறது?

கோடைக்காலங்களில் வனத்தீ ஏன் பரவுகிறது என்று குறிப்பிட்டோமானால் இயற்கையாக ஏற்படக்கூடிய வனத்தீ இருக்கிறது மற்றும் செயற்கையாக ஏற்படக்கூடிய வனத்தீயும் இருக்கிறது. இயற்கையாக ஏற்படக்கூடியவற்றை பார்த்தோமேயானால் கோடையினுடைய மழைக்காலங்களில் இடி, மின்னல் மூலமாக ஏற்படும். அல்லது பாறைகள் உருண்டு விழும் போது அதன் மூலமாக ஏற்படும். அல்லது மூங்கில்கள் உரசும் போது, ஒன்றோடொன்று உரசும் போது ஏற்படும்.

சேலத்தில் செயற்கை காட்டுத்தீயே அதிகம் 

நம்முடைய பகுதியைப் (சேலம்) பொறுத்தவரை இயற்கைத் தீ என்பது அரிதானது. ஆனால் செயற்கையாக ஏற்படக்கூடிய தீ தான் அதிகம். செயற்கையாக ஏற்படக்கூடியது என்று பார்த்தோமானால் அதாவது வனப்பகுதிகள் வழியாக செல்லக்கூடிய மின்கம்பி ஒயர்கள் அதன் மூலமாக ஏற்படலாம். அல்லது வாகனங்கள் செல்லும் போது அதனுடைய பொறி வெளியில் படும் போது அதன் மூலமாக ஏற்படலாம். அதை விட மிகக் குறிப்பாக மனிதர்களால் ஏற்படக்கூடிய தீ. அந்தத் தீ எவ்வாறு என்று பார்த்தால் சில சமூக விரோதிகள் உள்ளே சென்று மது அருந்துதல், அதே போன்று புகை பிடித்தல் அது மட்டுமல்லாது சமையல் செய்தல் இது போன்ற சமயங்களில் அவர்கள் விட்டுவிட்டு வரக்கூடிய தீயானது மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

Screenshot (60)
காட்டுத்தீ. படம்: வை. கலைச்செல்வன்

இதைக் குறிப்பாக மனதில் கொண்டு வனப்பகுதிகளுக்குள் உள்ளே செல்வதே தடை செய்யப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வனப்பகுதிகளைக் கடக்கும் போதும் சரி, வனப்பகுதிகள் வழியாக உள்ள சாலைகளில் செல்லும் போதும் சரி, மிக கவனமாக எந்த ஒரு தீ அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது நமது மலையேற்றப் பயிற்சிக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பு கருதி வாகனத்தடை

கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஏற்காட்டின் சரிவுப்பகுதிகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய இந்தத் தீயின் மூலமாக வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டது. மூங்கில்கள் தீப்பிடித்து எரியும் போது அந்த ‘internode’ என்று சொல்லக்கூடிய கனுப்பகுதிகளில் middle wall இருக்கும். அது தீயினால் வெடிக்கும். அவ்வாறு வெடிக்கும் போது ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குச் சிதறும். அப்படிச் சிதறும் போது வாகனத்தின் மேலேயோ அல்லது வாகனத்தில் செல்பவர்கள், பைக்கில் செல்பவர்கள் மீதும் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அது மட்டுமல்லாது மேலே போகப்போக பாறைகள் மற்றும் புற்கள் (grasses) எரிந்து கொண்டிருக்கின்றன. அது போல எரியும் போதும் பாறைகள் வெடித்துச் சிதறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நேற்றைக்குக் கூடப் பார்த்தால் ஏற்காடு மலைப்பகுதிகளில் அது போல பாறைகள் உடைந்து கீழே விழும் போது அது யார் மீதோ, மக்கள் மீதோ அல்லது வாகனத்தின் மீது உடைந்து சேதாரத்தை ஏற்படுத்தக் கூடாது. எந்த வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் வாகனங்கள் செல்வது தடைசெய்யப்பட்டது.

ஒத்துழைப்பு கொடுத்த அனைத்துத் தரப்பு மக்கள், பொதுமக்களுக்கும் பத்திரிக்கை நண்பர்களுக்கும், மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் நான் இதன் மூலம் வனத்துறையின் சார்பாக மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.Screenshot (59)

குறிப்பு: திருமிகு. சின்னசாமி பத்ரசாமி (Former DFO) அவர்களின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த ‘காட்டுத்தீயில் இருந்து காட்டை பாதுகாக்க உதவுங்கள்’ என்ற காணொளிக் காட்சியின் எழுத்து வடிவம்.