2020

ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு: ஒரு தலைமை ஆசிரியரின் பார்வை

எழுத்து: செந்தில்குமார், தலைமை ஆசிரியர் (மற்றும் பறவை ஆர்வலர்), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணம்புதூர், சேலம்.

இதோ நெருங்கிவிட்டது ஆண்டுதோறும் உலக அளவில் நடைபெறும் மாபெரும் பறவைகள் கணக்கெடுப்பான ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு 2020 Great Backyard Bird Count. பிப்ரவரி 14 முதல் 17 வரை நான்கு நாட்களும் பறவை ஆர்வலர்களுக்குக் கொண்டாட்டம் தான். தனியாகவோ, குழுவாகவோ இந்தியாவில் உள்ள பல்வேறு வாழிடங்களில் பறவை ஆர்வலர்களின் கால்தடம் பதிந்துவிடும். இருநோக்கி மற்றும் ஒளிப்படக்கருவிகள் மூலம் பறவைகளைச் சுட்டி வீழ்த்தும் அழகே தனி. இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் புதிய பறவைகளைப் பதிவு செய்வது முதல் அதிக பறவை இனங்கள் பார்ப்பது, அதிக பறவைப் பட்டியல்கள் சமர்ப்பிப்பது வரை மாபெரும் பங்களிப்புகளைத் தரக் காத்திருக்கும் அனைத்துப் பறவை ஆர்வலர்களுக்கும் முதலில் நன்றி சொல்லியே தீரவேண்டும்.

இக்கணக்கெடுப்பை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களும் வளாகப் பறவைகள் கணக்கெடுப்பில் Campus Bird Count பங்கு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு: https://birdcount.in/event/cbc2020/

gbbc-2019-stats-world
2019 கணக்கெடுப்பில் உலகளாவிய பங்களிப்பு

2018 & 2019ன் கணக்கெடுப்புகள்

2019 GBBCல் அதிக பறவைப் பட்டியல்கள் சமர்ப்பித்த நாடுகளில் மூன்றாவது இடத்திலிருந்து முன்னேறி முதல்முறையாக உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது இந்தியா. இப்படி உலக அளவில் நம் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது மிகவும் மகிழ்சிகரமான ஒன்று. இதற்கு பறவை ஆர்வலர்களின் அயராத உழைப்பும் ஒருங்கிணைப்பும் காரணம் என்று தான் கூற வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பறவைப் பட்டியல் (checklist) என்பது குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது இருக்க வேண்டும்.

கடந்த இரு ஆண்டுகளில் GBBCல் உலக அளவில் முதல் மூன்று இடங்களைப் (பறவைப் பட்டியல்கள் அடிப்படையில்) பிடித்த நாடுகள்

Rank

GBBC 2018 Checklists GBBC 2019 Checklists

1

அமெரிக்கா 1,10,151 அமெரிக்கா 1,21,459
2 கனடா 14,146 இந்தியா

22,273

3 இந்தியா 13,576 கனடா

14,667

கடந்த இரு ஆண்டுகளில் GBBCல் உலக அளவில் முதல் மூன்று/நான்கு இடங்களைப் (அதிக பறவை இனங்களைப் பதிவு செய்ததன் அடிப்படையில்) பிடித்த நாடுகள்

Rank

GBBC 2018 No. of Species GBBC 2019 No. of Species
1 கொலம்பியா 1009 கொலம்பியா

1115

2

கனடா 919 ஈக்வடார் 966
3 பிரேசில் 860 இந்தியா

852

4

இந்தியா 838 பிரேசில்

848

இந்தப் புள்ளி விவரங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தைக் காட்டினாலும் தேவைப்படும் வெற்றியை இன்னும் எட்டவில்லை என்று தான் நான் சொல்வேன். 120 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நம் திருநாட்டில் 2019 பிப்ரவரியில் நடைபெற்ற ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் பங்குபெற்ற பறவை ஆர்வலர்களின் எண்ணிக்கை வெறும் 1786 (based on eBird accounts) பேர் தான் என்பது வேதனை அளிக்கிறது. பறவைகளைப் பற்றிய விழிப்புணர்வு இன்மையையே இப்புள்ளி விவரங்கள் நமக்குக் காட்டுகின்றன.

அதன் விளைவு எத்தனை பறவை இனங்களை இழந்திருக்கிறோம். அழிவின் விளிம்பில் உள்ள பறவை பறவைகள் எத்தனை? அழிவை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் பறவைகள் எத்தனை? இன்னும் கானமயிலும் பாறுக்கழுகும் இந்தியா முழுவதும் நூறுகளின் எண்ணிக்கையிலேயே வாழ்க்கைப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன.

வடஇந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்குமான வேறுபாடு

2019ல் இந்திய அளவில் 22,273 பறவைப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 8 ஆயிரம் பட்டியல்கள் அதிகம் என்றாலும் இந்தியா முழுக்கப் பரவலாக இல்லாமல் தென்னிந்தியாவிற்கும் வடஇந்தியாவிற்குமான பெருத்த வேறுபாட்டைக் காட்டுகிறது. இந்தியாவின் மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றான உத்திரப்பிரதேசத்தில் வெறும் 80 பறவைப் பட்டியல்களே பதிவிடப்பட்டது வேதனை அளிக்கிறது.

மாநிலங்கள்

GBBC 2019 பறவைப் பட்டியல்கள்

தமிழ்நாடு

10,111

கேரளா

3,674
கர்நாடகா

2,734

பிற மாநிலங்கள் அனைத்தும்

5,754

மொத்தம்

22,273

இன்னும் இப்புள்ளி விவரங்களை ஆழ்ந்து நோக்கினால் இந்தியா முழுமைக்கும் 60 சதவீத மாவட்டங்களில் பறவைகள் பற்றியப் பதிவுகள் இல்லை. வெறும் 40 சதவீத பதிவுகள் தான் உலக அளவில் நம்மை இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. காரணம் ஒன்று தான். ஆண்டுதோறும் உலக அளவில் இப்படியொரு கணக்கெடுப்பு நடைபெறுகிறது என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இந்நிகழ்வினைக் கொண்டு செல்ல போதுமான வாய்ப்புகளும் வசதிகளும் இல்லை என்று பொருள். அரசு மட்டும் நினைத்தால் இதில் ஒரு பெரும் மாற்றத்தையும், விழிப்புணர்வையும் ஒரேயொரு அறிவிப்பின் மூலம் ஏற்படுத்த முடியும்.

2019 GBBC: தமிழ்நாடு பதிவு செய்த 10,111 பறவைப் பட்டியல்களில் 8,420 பட்டியல்கள் சேலம் மாவட்டப் பறவை ஆர்வலர்காளால் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கணக்கெடுப்பினால் என்ன பயன்? ஏன் செய்ய வேண்டும்?

இதனால் நமக்கு என்ன பயன் என்ற வினா தோன்றினால் விடை எளிதானது. சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை சுட்டிக்காட்டும் காரணிகளில் பறவைகளும் ஒன்று. பறவைகள் இல்லை என்றால் மனித இனமே இல்லாமல் போய்விடும் என்பது தான் நிதர்சனம். பறவைகளின் தன்னலம் கருதாப் பயன்களையும், தொடர்ந்து நவீனத்தால் பறவைகள்படும் துயரங்களையும் கடந்த, இந்த தலைமுறைகளும் அறியாமலே உள்ளனர். அதனை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதற்கு ஒரு வாய்ப்பாக இந்தக் கணக்கெடுப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் நாம் தரும் ஒவ்வொரு தகவல்களும் பறவைகளைக் காப்பாற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

வீட்டிற்கு ஒரு இயற்கை ஆர்வலர் தேவை!

மதிப்புமிக்க இயற்கையைப் பற்றி அறிந்து கொள்ளாமல் தேர்வு மதிப்பெண்களின் பின்னே ஒரு தலைமுறை ஓடிக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் கல்வி என்று பள்ளியில் ஒரு தேர்வு நடைபெறும். ஆனால் அதில் பெறும் மதிப்பெண்களோ மதிப்பெண் பட்டியலில் இடம் பெறாது. பறவைகள் தான் சுற்றுச்சூழலின் தூதுவர்கள். பறவைகளைப் பற்றியோ இயற்கையைப் பற்றியோ புரிதல் ஏதுமின்றி தலைமுறைகள் உருவாவது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். சீரழிந்து வரும் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வீட்டுக்கு ஒருவர் பறவை/இயற்கை ஆர்வலராக மாற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இது போன்ற கணக்கெடுப்பில் பங்குகொள்ள பறவை ஆர்வலராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இருந்தாலே போதுமானது.

விளையாட்டாகச் செய்யலாமே…

உங்கள் பகுதியிலும் பறவைகளைக் கணக்கெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டதா? விளையாட்டாக ஒரு முறை பறவைகளைக் கணக்கெடுக்க வெளியே வாருங்கள். பறவைகள் உங்களை எப்படி ஈர்க்கிறது என்பது புரியும். நானும், என் குடும்பமும், பள்ளி மாணவர்களும் பிப்ரவரி 14 தொடங்கவிருக்கும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் கலந்துகொள்ளத் தயாராகிவிட்டோம். நீங்களும் தயாரா?

இந்த நான்கு நாட்களில் (14-17 பிப்ரவரி 2020) என்ன செய்ய வேண்டும்? நாம் குடியிருக்கும் பகுதியைச் சுற்றியுள்ள பறவைகளைப் பார்த்து, அடையாளம் கண்டு, கணக்கிட வேண்டும். இதை குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் செய்தாலே போதுமானது. நாம் எழுதி வைத்துள்ள பறவைப் பட்டியலை என்ன செய்ய வேண்டும், இதில் பள்ளிகள் பங்கு பெறலாமா, எப்படிச் செய்ய வேண்டும் போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

மேலும் உங்கள் பகுதியில் உள்ள பறவை ஆர்வலர்களையும் தொடர்பு கொள்ளலாம். சேலத்தில் ஊர்புறப் பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு குறித்த விரிவானத் தகவல்களுக்கும், பறவைகள் சார்ந்த குறுங்கையேடுகள், காட்சிப்படங்கள் போன்றவற்றைப் பெற சேலம் பறவையியல் கழகத்தை தொடர்பு கொள்ளவும்: 7598457496 or 9361313312.  GBBC poster SOF

ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு: ஒரு தலைமை ஆசிரியரின் பார்வை Read More »

ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு

ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு (Asian Waterbird Census) என்னும் மக்கள் அறிவியல் திட்டம் 1987ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் வாயிலாகத்தான் பறவைகள் கணக்கெடுப்பும் கண்காணித்தலும் பல பறவை ஆர்வலர்களுக்கு அறிமுகமானது. இது உலக அளவில் நடைபெறும் சர்வதேச நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பின் ஓர் அங்கம். இத்திட்டத்தின் பொன்விழா ஆண்டு 2017ல் நிறைவுற்றது.

இதில் பங்குகொள்ள நீங்கள் ஒரு நீர்நிலைக்குச் சென்று அங்குள்ள பறவைகளின் வகைகளையும் அவற்றின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் கணக்கெடுப்பு சீராக அமைய வேண்டும் என்பதற்காக AWC, ஜனவரியில் சில குறிப்பிட்டத் தேதிகளில் நாம் கணக்கெடுப்பை மேற்கொள்ள பரிந்துரைக்கிறது. இருப்பினும் ஜனவரியின் மற்ற நாட்களில் நாம் மேற்கொள்ளும் கணக்கெடுப்பின் தகவல்களும் வரவேற்கப்படுகிறது. இந்த ஆண்டின் கணக்கெடுப்பு 2020 ஜனவரி 4 முதல் 19 வரை நடைபெற உள்ளது.

 

waterbird_census_newsletter_2_0_1_0

நீங்கள் கணக்கெடுத்தப் பறவைகளின் எண்ணிகையைச் சமர்ப்பிக்க மூன்று வழிகள் உள்ளது. அந்த அனைத்து வழிமுறைகளையும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும். நாம் அந்த மூன்றில் எளிமையான ஒரு வழிமுறையைப் பற்றி இங்கே பார்ப்போம்: eBirdடுடன் கூடிய நீர்நிலை மதிப்பீடு படிவம். அதன் முக்கியக் குறிப்புகள் பின்வருமாறு:

1. ஒரு நீர்நிலையைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள பறவைகளைப் பார்த்து, அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு பறவைப் பட்டியலை தயார் செய்யவும். ஒரு நீர்நிலையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று கணக்கெடுப்பை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் செல்லும் ஒவ்வொரு நீர்நிலைக்கும் தனித்தனியே பறவைப் பட்டியலைத் தயார் செய்யவும்.

2. நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் பறவைப் பட்டியல்களை எப்போதும் போல www.ebird.org/indiaல் உள்ளீடு செய்யவும். ஒரு வேளை நீங்கள் இதுவரை eBird பயனராக இல்லாமல் இருந்தால், eBirdல் பறவைப் பட்டியலைப் பதிவேற்றம் செய்வது பற்றி அறிய இங்கே சொடுக்கவும். ebird intro image

eBirdல் உங்கள் பறவைப் பட்டியலைப் பதிவேற்றம் செய்தவுடன் அப்பட்டியலை AWC Indiaவின் eBird பயனர்பெயரான awcindiaவோடு பகிர்ந்து கொள்ளுங்கள் (‘share’ the checklist with the username – awcindia). மேலும் நீங்கள் சமர்ப்பித்த பறவைப் பட்டியலின் உரலியை குறித்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக அந்த உரலி இவ்வாறு இருக்கும்: https://ebird.org/india/checklist/S42477986

3.  ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பிற்கு பறவை இனங்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கையைப் பட்டியலிடுவதோடு மட்டுமின்றி மேலும் சில கூடுதல் தகவல்களை அளிக்க வேண்டும். இது நாம் கணக்கெடுக்கும் நீர்நிலையின் தன்மையைப் பற்றியதாகும். எடுத்துக்காட்டாக நீர்நிலையின் பயன்பாடுகள், அதற்குள்ள ஆபத்துகள் போன்றவை ஆகும். இந்தக் கூடுதல் தகவல்களை AWC India eBird 2020 Wetland Assessment Form என்ற படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் போது நாம் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது குறிப்பிட்ட நீர்நிலையில் இருந்து நாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ள பறவைப் பட்டியலின் eBird உரலி ஆகும். அதையும் படிவத்தில் தவறாது உள்ளீடு செய்ய வேண்டும்.

மேற்கூறியவற்றை ஒரே வரியில் மீண்டும் பார்ப்போம். இது மிகவும் எளிமையான வழிமுறையாகும்.

  • நீர்நிலைகளுக்குச் செல்லுதல்
  • பறவைப் பட்டியலை eBirdல் பதிவேற்றம் செய்தல்
  • AWC India eBird 2020 Wetland Assessment Form படிவத்தைப் பூர்த்தி செய்தல்

eBirdடுடன் கூடிய AWC நீர்நிலை மதிப்பீடுப் படிவதைப் பூர்த்தி செய்தல் என்பது உங்களுக்குப் புதியதாக இருக்கலாம். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு சார்ந்த உங்களது கருத்துகள், பதிவுகள், படங்கள் போன்றவற்றை பல்வேறு சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து உங்கள் நண்பர்களையும் இதில் பங்குபெறச் செய்யுங்கள். இதற்கு #waterbirdscount மற்றும் #IWC50 என்ற ஹாஷ்டேக்குகளை பயன்படுத்தவும். இதன் மூலம் உங்கள் அனைவரின் கருத்துகளையும் ஒன்றிணைத்து வெளியிட இயலும்.

தமிழகத்தின் AWC மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

  1. சுதாகர். கே.வி. – [email protected]
  2. குமரன் சதாசிவம் – [email protected]

awc50

Note: Published in English by Bird Count India. Tamil Translation: Ganeshwar SV.

 

ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு Read More »

நீங்கள் தயாரா? – உலகின் மிகப்பெரிய பறவைகள் கணக்கெடுப்புத் திருவிழா

சில பறவை ஆர்வலர்களுக்கு காணக்கிடைக்காத அழகானப் பறவைகளைக் காண்பது வாழ்நாளின் முக்கிய இலட்சியமாக இருக்கும். மற்ற சிலர் இந்த ஆண்டு குறிப்பிட்ட ஒரு பறவையைக் காண வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சிகள் மேற்கொள்வர். பறவைப் பார்த்தலின் போது கிடைக்கும் சொல்லுதற்கரிய பேரானந்தத்திற்காக மட்டுமே பறவைகளை விரும்பி நோக்குவோரும் பலர் உண்டு. வேறு சிலருக்கு பறவைகள் என்றால் அதீத விருப்பமாக இருக்கும் ஆனால் பறவை நோக்குதலில் எல்லாம் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இவர்கள் அனைவரின் வாழ்விலும் இடம்பெறும் பறவை நோக்குதல் நிகழ்வுகளுள் வருடத்தின் மிக முக்கிய நிகழ்ச்சியான சர்வதேச ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count) இந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

இந்த மாபெரும் கணக்கெடுப்புத் திருவிழாவில் உலகம் முழுவதும் உள்ள ஆர்வலர்கள் பறவைகளைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அவற்றைக் கணக்கெடுக்க தம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்வர். பறவை ஆர்வலர்களுக்கு இது ஒரு மாரத்தான் ஓட்டத்தைப் போல. ஆனால் இதில் போட்டி கிடையாது. இக்கணக்கெடுப்பை தேசிய அளவில் Bird Count India ஒருங்கிணைக்கிறது.

GBBC2014

ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GREAT BACKYARD BIRD COUNT) என்றால் என்ன?

நம் வீடு முதல் தினசரி நாம் சென்று வரும் இடங்கள் வரை ஏதேனும் சில பறவைகளை தற்செயலாகவாவது பார்த்திருப்போம். நமக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று நாம் நினைத்தாலும் உண்மையில் நிறையவே தொடர்பு உண்டு. அப்படி நம் சுற்றுப்புறங்களில் பார்க்கும் பொதுப்பறவைகளை கணக்கிடுவதே GREAT BACKYARD BIRD COUNT (GBBC) என்னும் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு ஆகும். இது உலகம் முழுவதும் ஒரே வேளையில் நடைபெறும் மாபெரும் திருவிழா.

வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு (CAMPUS BIRD COUNT) என்றால் என்ன?

ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பையே ஒரு வளாகத்திற்குள் இருந்து மேற்கொள்வது தான் வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணி புரிவோர் தாங்கள் இருக்கும் வளாகத்திற்கு வந்து செல்லும் பறவைகளைக் கணக்கெடுக்க ஓர் வாய்ப்பு இது. இதன் வாயிலாக குறிப்பிட்ட ஒரு இடத்தின் சூழல் தன்மையினை அறியலாம்.

இதை ஏன் செய்ய வேண்டும்?

பறவைகள் சூழியல் சுட்டிக்காட்டிகள். இந்தியாவின் பறவை மனிதர் சாலிம் அலி, பறவைகள் இல்லையென்றால் இந்த உலகம் 15 அடி வரை வெறும் பூச்சிகளால் நிரம்பும் என்று குறிப்பிட்டுள்ளார். மதுசூதன் கட்டி என்ற மற்றொரு ஆராய்ச்சியாளர் தன் ஆய்வில், ஒரு கதிர்க்குருவி ஒரு நிமிடத்திற்கு மூன்று பூச்சிகள் வரை உண்ணும் என்றும், கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு நாளில் ஒரே ஒரு சிறிய கதிர்க்குருவி மட்டும் சுமார் 2000 பூச்சிகள் வரை உண்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்! இது விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும். எனவே இது போன்ற பல உதவிகளைப் பறவைகளும் பிற உயிர்களும் நமக்கு இலவசமாகச் செய்கின்றன. அவற்றின் தினசரி செயல்பாடுகளால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. மனிதர்களின்றி பறவைகள் வாழும். ஆனால் பறவை போன்ற உயிரினங்கள் இல்லாமல் மனித இனம் வாழ முடியாது.

உலகம் முழுக்க உள்ள அனைத்துப் பறவைகளையும் ஒரே நேரத்தில் கணக்கிடுவதால் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை ஆண்டுதோறும் எளிதாகக் கண்டுபிடிக்க இயலும். இது போன்ற நீண்ட காலத் திட்டங்களின் முடிவுகள் பறவைகளின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. இந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு ஏற்றவாறு உயிரினங்களின் வாழிடங்களுக்கு ஏற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க இயலும். எனவே இந்தக் கணக்கெடுப்பில் நம்முடைய பங்களிப்பும் முக்கியமான ஒன்றாகும்.

gbbc-2019-stats-world
2019 கணக்கெடுப்பில் உலகளாவிய பங்களிப்பு

மக்கள் அறிவியல் (CITIZEN SCIENCE)

இது போன்ற உலகம் தழுவிய கணக்கெடுப்பை சில ஆராய்ச்சியாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ நடத்துவதென்பது இயலாத காரியம். ஆகவே தன்னார்வமுள்ள, இயற்கை பாதுகாப்பில் நாட்டமுள்ள பொதுமக்களின் உதவியும் அவசியம். இதுபோன்ற அறிவியல் துறைகளில் பொதுமக்களின் பங்களிப்பில் நடைபெறும் திட்டங்களை மக்கள் அறிவியல் (citizen science) என்பர்.

மக்கள் விஞ்ஞானி (CITIZEN SCIENTIST)

இந்தியாவில் இது போன்று சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை கணக்கெடுத்தல் 2012ல் நடைபெற்றது. சிட்டுக்குருவிகளோ மற்ற பறவைகளோ செல்போன் கதிர்வீச்சினால் பாதிக்கப்படுகின்றன என்பது தவறான தகவலாகும். இது அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பெருநகரங்களில் குறைந்து வந்தாலும் மற்ற இடங்களில் நல்ல எண்ணிகையில் பரவி உள்ளது. இந்தியாவில் சிட்டுக்குருவிகளின் பரவல் மற்றும் பிற தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

மேலும் SeasonWatch (www.seasonwatch.in) எனும் திட்டம் பல்வகையான மரங்கள் பூப்பூக்கும், காய்க்கும் வேளைகளை பதிவு செய்கிறது. தற்போது நடைபெறவுள்ளது சர்வதேச ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC). இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவரும் மக்கள் விஞ்ஞானி (citizen scientist) ஆவர்.

2019_Feb_HOSP
இந்தியாவில் சிட்டுக்குருவிகளின் (House Sparrow) பரவலும் எண்ணிக்கை அடர்த்தியும் (Source: eBird India)

இந்தக் கணக்கெடுப்பு எப்போது நடைபெறுகிறது?

வருடந்தோறும் இந்தக் கணக்கெடுப்பு பிப்ரவரி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு (2020), பிப்ரவரி 14 முதல் 17 வரை நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பு இல்லாமல் வருடம் முழுவதும் நாம் விரும்பும் நேரத்திலும் பறவைகளைக் கணக்கிடலாம்.

எந்த நேரத்தில் பறவைகளைக் கணக்கெடுக்க வேண்டும்?

குறிப்பிட்ட நேரம் எதுவும் இல்லை. நாம் விரும்பிய நேரத்தில் செய்யலாம். காலை எழுந்தவுடன், வேலைக்குச் செல்லும் போது, மதிய உணவு இடைவேளையில், மாலையில் வீட்டிற்கு வந்து தேநீர் பருகும் போது, ஏன் நள்ளிரவிலும் கூட செய்யலாம்.

எவ்வளவு நேரம் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்?

குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது ஓர் இடத்தில் இருந்து பறவைகளைக் கணக்கிட வேண்டும். அதற்கும் அதிகமாக நமக்கு நேரம் இருந்தால் தாராளமாகத் தொடரலாம்.

எங்கிருந்து பறவைகளைக் கணக்கிட வேண்டும்?

நம் வீடுகளில் இருந்தோ, பள்ளி, கல்லூரி பிற நிறுவனங்களின் வாளாகத்திலிருந்தோ, பூங்கா, ஏரிகள், குளங்கள் போன்ற பொது இடங்களில் இருந்தோ நாம் பார்க்கும் பறவை இனங்களையும் அவற்றின் எண்ணிக்கையையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்ய வேண்டும்?

உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாம். உதாரணத்திற்கு காலை வீட்டிலிருந்து புறப்படும் முன்னர் 15 நிமிடங்கள் கணக்கிட்டுவிட்டுச் செல்கிறேன். மீண்டும் மாலை வீட்டிற்கு வந்ததும் நேரமிருந்தால் செய்யலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் அதிக நேரம் நமக்குக் கிடைக்கும்.

இதில் பங்கு கொள்ள என்ன தகுதி வேண்டும்?

ஆர்வமும் இயற்கை மற்றும் பறவைகளைப் பாதுகாக்கும் எண்ணமும் யாருக்கு இருந்தாலும் அவர்கள் அனைவரும் பங்கு கொள்ளலாம்.

கணக்கெடுப்பிற்கு என்னென்ன உபகரணங்கள் தேவைப்படும்?

இந்த கணக்கெடுப்பிற்காக மட்டுமல்ல நாம் எப்போது பறவைகளைப் பார்க்கத் தயாரானாலும் முதலில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது ஒரு சிறிய நோட்டும் பேனாவும். பைனாகுலர் இருந்தால் நல்லது. இல்லையென்றால் எக்கவலையும் வேண்டாம். பறவைகளைப் பார்க்க கண்களும் காதுகளும் ஆர்வமும் இருந்தால் போதும்.

இந்தக் கணக்கெடுப்பை எப்படிச் செய்ய வேண்டும்?

இக்கணக்கெடுப்பிற்கு மக்கள் விஞ்ஞானியான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்: நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு முதலில் இடம், தேதி, துவங்கும் நேரம், முடிக்கும் நேரம் ஆகியவற்றை எழுதிக்கொள்ள வேண்டும். நாம் துவங்கிய நேரத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 நிமிடங்களில் என்னென்ன பறவை இனங்கள் எத்தனைப் பார்க்கிறோம் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டு:

இடம்: கோர்ட் ரோடு, மணக்காடு, சேலம். தேதி: 15 பிப்ரவரி 2020.

துவங்கிய நேரம்: காலை 7 மணி.

முறை: பயணித்துக்கொண்டு (அ) ஓரிடத்தில் நின்றுகொண்டு.

பார்த்த பறவைகள் மற்றும் எண்ணிக்கை: காகம் – 10, அண்டங்காக்கை – 3, மைனா – 5, கிளி – 1, புறா – 15. மரங்கொத்தி – 1 (பெரிய பறவைக் கூட்டங்களை எண்ணுவது எளிதல்ல. இருப்பினும் உங்காளால் முடிந்த வரை கணிக்கவும்.)

முடித்த நேரம்: காலை 07.20 (மொத்தம் 20 நிமிடங்கள்) இந்த அனைத்துத் தகவல்களும் அடங்கியக் குறிப்பை ஒரு பறவைப் பட்டியல் (checklist) என்று அழைக்கிறோம்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் (14-17 பிப்ரவரி, 2020) கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பட்டியல், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்ட பட்டியல் மற்றும் ஒரு நாளில், ஒரே இடத்திலிருந்து, வெவ்வேறு நேரங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பறவை பட்டியல் (அல்லது பட்டியல்களை) eBird இணையதளத்தில் சமர்ப்பிக்கவும்.

படமெடுத்தவர் அவிஷ்கர் முஞ்சே
Photo by Avishkar Munje via Bird Count India

eBirdல் (www.ebird.org/india) பறவைப் பட்டியல்களை எவ்வாறு உள்ளீடு செய்வது?

ஒரு வேளை eBird இணையத்தில் நீங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் உடனே உங்களது பெயரிலோ அல்லது உங்களது நிறுவனத்தின் பெயரிலோ அல்லது குழுவின் பெயரிலோ பதிவு செய்து கொள்ளுங்கள். பிறகு நம்மிடம் இருக்கும் பறவைப் பட்டியல்களை சமர்ப்பிக்க வேண்டும். இது மிக மிக எளிது. ஒரு புதிய eBird கணக்கைத் தொடங்கி பறவைப் பட்டியல்களை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்கான சிறிய விளக்கத்தை இந்த உரலியில் காணலாம்: https://drive.google.com/file/d/0B2Bn6VQ-cccYWU5oZzBmUWhrM1U/view

பார்க்கும் புதிய, பெயர்த் தெரியாதப் பறவையின் பெயரைக் கண்டுபிடிக்க கையேடு அல்லது புத்தகம் ஏதேனும் உள்ளதா? 

க்ரியா பதிப்பகம் பிரசுரித்துள்ள ப. ஜெகநாதன் & ஆசை எழுதிய 88 பறவைகளின் வண்ணப்படங்கள் கூடிய “பறவைகள்: ஓர் அறிமுகக் கையேடு” என்னும் புத்தகத்தையோ அல்லது Early Bird வெளியிட்டுள்ள 138 பறவைகளை உள்ளடக்கிய “தமிழகப் பறவைகள்” என்னும் குறுங்கையேட்டையோ வாங்கலாம் (www.early-bird.in). ஆங்கிலத்தில் ரிச்சர்ட் கிரிம்மெட், டிம் இன்ஸ்கிப் மற்றும் கரோல் இன்ஸ்கிப் எழுதிய 1,375 பறவைகளைக் கொண்ட Birds of the Indian Subcontinent (Second edition) என்ற புத்தகத்தையும் வாங்கலாம்.

TN Birds Pocket guide
இக்கையேட்டை வாங்க: www.early-bird.in

மேலும் இது போன்ற சூழியல் நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கிப் பயன்பெற: crownest.in. தமிழில் கட்டுரைகளைப் படிக்க ஆராய்ச்சியாளர் ப.ஜெகநாதன் எழுதுகிற உயிரி வலைப்பதிவைக் காணுங்கள் (GBBC குறித்த இக்கட்டுரைக்கான சில குறிப்புகளும் அதிலிருந்து பெறப்பட்டுள்ளன).

BBT 1
தமிழில் சில பறவைப் புத்தகங்கள். பட உதவி: பின்ட்ரெஸ்ட்

பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் முன்பதிவு செய்ய வேண்டுமா? 

இந்தியாவில் இக்கணக்கெடுப்பில் பங்கு கொள்ளும் அனைத்து நிறுவனங்களும் இலவசமாக தங்கள் பள்ளி/கல்லூரி/நிறுவனத்தின் பெயரை இந்தியப் பறவைகள் கணக்கெடுப்புக் குழுமத்தின் வலைதளத்தில் https://birdcount.in/event/gbbc2020/ இலவசமாகப் பதிவு செய்யலாம்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கீழ் செயல்படும் துளிர் இல்லங்களையும் பதிவு செய்யலாம். துளிர் இல்லம் மூலம் நீங்கள் கணக்கெடுப்பு நடத்தினால் eBirdல் உங்கள் துளிர் இல்லத்தின் பெயரிலேயே புதிய கணக்கைத் துவங்கலாம் (எ.கா: TNSF Salim Ali Thulir Illam).

பங்கு கொள்வோருக்கு சான்றிதழ் வழங்கப்படுமா?

நான்கு நாள் கணக்கெடுப்பு முடியும் தருவாயில் www.gbbc.birdcount.org என்ற வலைதளத்தில் சர்வதேச சான்றிதழ் ஒன்று வெளியிடப்படும். அதை நாம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கணக்கெடுப்புத் திருவிழாவிற்கு நீங்கள் தயாரா?

இயற்கையின் மீதும் பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரைத்து அவர்களையும் பங்குபெறச் சொல்லுங்கள்!

மேலும் விவரங்களுக்கும், உங்கள் பள்ளி/கல்லூரி/நிறுவனத்தைப் பதிவுவிட்டு கணக்கெடுப்புகள் செய்யவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சேலம் பறவையியல் கழகத்தை தொடர்பு கொள்ளவும்: [email protected] or +91-9361313312.

GBBC poster SOF

CBC poster SOF

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறுவர்களுக்காக வெளியிடும் “துளிர்,”  அறிவியல் மாத இதழில் பிப்ரவரி 2018 பிரசுரமானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு.வே. கணேஷ்வர்.

 

நீங்கள் தயாரா? – உலகின் மிகப்பெரிய பறவைகள் கணக்கெடுப்புத் திருவிழா Read More »